10 சதவீத இட ஒதுக்கீடு.. ஏற்றுக்கொள்ளுமா உச்சநீதிமன்றம்..?

share on:
Classic

பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் உயர்சாதி வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கி உள்ள மத்திய அரசை பல்வேறு அமைப்புக்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு:

பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் உயர் சாதி வகுப்புகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது சம்மந்தமாக மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவும் முடிவு செய்துள்ளது. அரசியலமைப்பு திருத்ததை மேற்கொள்ள இந்த மசோதா நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்ய உள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய அரசின் இந்த செயலை பல்வேறு தரப்பினர் ஆதரித்தும் விமர்சித்தும் கருத்துகளை தெரிவித்து வருகின்றன. நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக இல்லாததால் இந்த முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

 

இடஒதுக்கீடு வறுமையை ஒழிப்பதற்கு அல்ல:

இடஒதுக்கீடு என்பது காலம் காலமாக சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய வேண்டுமே தவிர வறுமையை ஒழிக்க இடஒதுகீடு தேவை இல்லை என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் நூற்றாண்டு காலமாக குறிப்பிட்ட மக்களுக்கு மறுக்கப்படும் உரிமையை பெறுவதற்கு தான் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும்.  மத்திய அரசின் இந்த முடிவு அரசியல் உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட அருவருப்பான முடிவு என்ற கடுமையான குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது உயர் சாதியினரை திருப்திப்படுத்தும் நடவடிக்கையாக தான் உள்ளது.

 

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி சட்ட மசோதா:

1991-இல் இதே போன்ற ஒரு முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டது. ஆனால் அப்போது ஆட்சியிலிருந்தது பாஜக அல்ல, காங்கிரஸ். அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ்  தலைமையிலான அமைச்சரவை உயர் சாதி வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க அனுமதி அளித்தது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் 10% இடஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது. தற்போது மத்திய பாஜக அரசு கொண்டு வர உள்ள இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமா ? அப்படியே நிறைவேற்றப்பட்டாலும் உச்சநீதிமன்றம் இந்த மசோதவை ஏற்குமா ? உயர் சாதி வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கினால், மற்ற வகுப்பினர் இதை எப்படி பார்ப்பார்கள் என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. 

News Counter: 
100
Loading...

aravind