வாங்கலாமா ரோல்ஸ் ராய்ஸ் ...!

share on:
Classic

கார் பிரியர்களின் முதலாவது சாய்ஸ் எது என்று கேட்டால் அவர்கள் கண்களை மூடிக்கொண்டு சொல்லும் ஒரே பதில் ரோல்ஸ் ராய்ஸ் கார். ஆனால், மற்ற கார்களுடன் ஒப்பிடுகையில் ரோல்ஸ் ராய்ஸின் விலை வாயைப் பிளக்க வைக்கும் அளவு உள்ளது. சொகுசு கார் உலகில் பிரதான இடம் வகிக்கும் இந்த காரை வாங்குவது அவ்வளவு எளிதல்ல. 

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் வரலாறு:
சார்ல்ஸ் ரோல்ஸ் மற்றும் ஹென்ரி ராய்ஸ் என்ற இருவரால் 1904-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது தான் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம். விமான என்ஜின் தயாரிப்பு நிறுவனமாக இருந்த இது, ஜெர்மனின் பி.எம்.டபுள்யூ. உதவியோடு சொகுசு கார்களை தயாரிக்கத் தொடங்கியது.  1998-ஆம் ஆண்டு  ரோல்ஸ் ராய்ஸின் தலைமையகம் இங்கிலாந்தில்  நிறுவப்பட்டது. உதயமான இதே ஆண்டில் தமது முதலாவது படைப்பை வெளியிட்ட ரோல்ஸ் ராய்ஸ், கார் உலகில் பலத்த வரவேற்புடன் அடியெடுத்து வைத்தது. இந்நிறுவன கார் 24,000 கிலோமீட்டர் நிற்காமல் ஓடி சாதனை படைத்ததால் சர்வதேசத்தின் பார்வை இங்கிலாந்தை நோக்கி திரும்பியது. இங்கு தொடங்கிய வெற்றிப்பயணம், ஒருமுறை கூட பஞ்ச்சர் ஆகாமல் இப்போது வரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்நிறுவனம் விமான என்ஜின்களை தயாரித்துக்கொண்டிருந்ததால், காரின் வேகத்தில் ஒருபோதும் சமரசம் ஆகக்கூடாது என்பதில் நிர்வாகம் தீவிரமாக இருந்தது.

ரோல்ஸ் ராய்ஸ் உருவாக்கமும் சிறப்புகளும்:
மற்ற கார்களில் இல்லாத பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த காரில் உண்டு. ரோல்ஸ் ராய்ஸின் முதலாவது சிறப்பம்சம் என்னவென்றால், அதன் பேனட்டில் பொருத்தப்பட்டுள்ள ’ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸி’ உருவம். சிறகை விரித்து பெண் பறப்பது போன்ற இந்த உருவம், எல்லைகளற்று சாலையில் சிறகடித்து பறக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இது பொருத்தப்பட்டிருக்கும் கார் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸாக கருதப்படும். இல்லையென்றால் சைனா அல்லது கொரியாவின் போலி கார்  என்று முத்திரை குத்தப்பட்டு விடும். கிட்டத்தட்ட ரூ. 40,00,000 மதிப்பிலான இந்த ’ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸி’ உருவத்தை யாராவது தொட முயன்றாலோ அல்லது விபத்து ஏற்படும்போதோ, காரின் முன்பக்கமுள்ள ’கிரில்’ அடுக்கில் தானாக சென்று ஒளிந்துகொள்ளும். 

சக்கரங்களில் பொருத்தப்பட்டுள்ள ’RR’ என்ற லோகோ, எவ்வளவு வேகமாக வண்டியை ஓட்டினாலும் சுழலவே சுழலாது. நிலையாக ஒரே இடத்திலேயே இருப்பது இதன் இதன் மற்றொரு சிறப்பு. உலகின் அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது படைப்புகளை உருவாக்க இயந்திரங்களையே பெருமளவில் நம்பியுள்ளன. ஆனால், ரோல்ஸ் ராய்ஸ் மட்டும் இதற்கு விதிவிலக்காக, முழுக்க முழுக்க மனிதர்களை மட்டுமே நம்பி கார்களை உருவாக்குகின்றன. காரின் முகப்பில் உள்ள கிரில்லை பொருத்த ஒரு பணியாளர், ஒரு நாள் முழுவதும் உழைக்க வேண்டும். இதன் ஒவ்வொரு கிரில்லையும் பாலிஷ் செய்து முடிக்கவே 5 மணி நேரம் ஆகிவிடும்.

இந்த காருக்கு பெயிண்ட் அடிப்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. 10 நாட்கள், 22 படிநிலைகளில் மற்றும் 5 லேயர்களாக பெயிண்ட் அடிக்கும் பணி முன்னெடுக்கப்படுகிறது. மொத்தம் 45 கிலோகிராம் எடை கொண்ட பெயிண்ட், காரின் பாடியில் அடிக்கப்படுகின்றன. காரின் பெரும்பாலான 80% பாகங்கள் கையால் பெயின் அடிக்கப்பட்டு, கடைசி 20% பணி மட்டும் இயந்திரத்தால் செய்யப்படும். ஒருவேளை, பயணத்தின் போது கதவுகள் திறந்துவிட்டால் கார் அதுவாகவே மெதுவாய் செல்ல ஆரம்பித்துவிடும். ஓட்டுனரின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த சிறப்பம்சம் இடம்பெற்றுள்ளது. 

காரின் உட்புற அழகிற்காக ஸ்காண்டினேவியன் எருதுகளின் தோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக, இறைச்சிக்காக வெட்டப்படும் எருதுகளின் தோல்கள் தான் பெறப்படுகிறதே தவிர காரின் உருவாக்கத்திற்காக ஆரோக்கியமான மாடுகள் வெட்டப்படுவதில்லை. அழகிய வேலைப்பாட்டிற்காக 17 நாட்கள், 450 தோல் துண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. 2010-ஆம் ஆண்டு வரை ரோல்ஸ் ராய்ஸின் வெளிப்புற தோற்றம் மட்டும் புகழப்பட்டு வந்த நிலையில், அதன் உட்புறத்திலும், செயல்திறனிலும் மாறுதல்கள் கொண்டு வரப்பட்டு மெருகேற்றப்பட்டது. குறிப்பாக, சில மாடல் காரின் உட்புற மேற்பரப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபைபர் லைட்டுகள் பொருத்தப்பட்டு, நட்சத்திரங்களின் அடியில் அமர்ந்து பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். இதனை உருவாக்குவதற்கு கிட்டத்தட்ட 12 மணி நேரம் தேவைப்படும். 

ரோல்ஸ் ராய்ஸ் மாடல்கள்:
ஃபாண்ட்டம், கில்லியன், கோஸ்ட், வ்ரைத், டான் என ரோல்ஸ் ராய்ஸ் இதுவரை 5 மாடல்களில் வெளியாகியுள்ளது.  ஃபைலியராக இந்த மாடல்களை குறைந்த எண்ணிக்கையில் விற்பனை செய்து, அதிக வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ள ஒரே நிறுவனம் ரோல்ஸ் ராய்ஸ் மட்டுமே. கோஸ்ட் மாடல் காரை உருவாக்க 30 முதல் 60 நாட்களும், ஃபாண்ட்டம்  மாடல் கார் உருவாக்கத்திற்கு குறைந்தபட்சம் 45 நாட்களும், சில குறிப்பிட்ட ரோல்ஸ் ராய்ஸ் மாடல்களை உருவாக்க ஓராண்டு கூட ஆகும். 2005-ஆம் ஆண்டில் 796 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் மட்டுமே விற்பனையானது. இதன்பிறகு, கார் பிரியர்களை கவர்ந்து இழுத்ததன் விளைவாக கடந்த 2016-ஆம் ஆண்டில் 50 நாடுகளில் 4,011 கார்கள் விற்றுத்தீர்ந்தன. ஆனால், 2005-ல் இருந்த விலையை விட 2016-ல் இருந்த விலை 10 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபாண்ட்டம் மாடல் காரின் விலை 9 முதல் 11 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல்,  கோஸ்ட் மாடல் கார் ஐந்தரை முதல் 7 கோடி ரூபாய்க்கும்,  வ்ரைத் மாடல் கார் ஆறரை முதல் ஏழரை கோடி ரூபாய்க்கும், டான் மாடல் கார் ஏழரை முதல் 8 கோடி ரூபாய்க்கும், கில்லியன் மாடல் கார் 5 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகிறது.  

அதிக விலையுடைய ரோல்ஸ் ராய்ஸ் கார்:
அதிக விலை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ்  கார் என்ற பெருமையை ’ஃபாண்ட்டம் கோல்டு’ மாடல் பெற்றுள்ளது. இந்த காரின் விலை 60 கோடி ரூபாய். இந்தளவு விலையேற்றத்திற்குக் காரணம், அழகுக்காக 120 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டிருப்பது தான். இதுபோன்ற எண்ணற்ற வேலைப்பாடுகளும், பணியாளர்களின் மெனக்கெடல்களும் தான் ரோல்ஸ் ராய்ஸ் காரை சொகுசு கார் உலகின் அரசனாக வலம் வர வைக்கின்றன. ’ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கும் நபருக்கு செல்வாக்கு அவசியம்’ என விதிக்கப்பட்டிருந்த நிபந்தனை அண்மையில் நீக்கப்பட்டிருந்தது நினைவுகூறத்தக்கது. 

News Counter: 
100
Loading...

admin