ஆர்.எஸ்.எஸ் - மோடி கருத்து வேறுபாடு : மோடிக்கு எதிரான ஆதரவை திரட்டும் ஆர்.எஸ்.எஸ்

Classic

மக்களவைத் தேர்தல் முடியும் வரை ராமர் கோயில் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக இந்துத்துவா அமைப்புக்கள் அறிவித்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடே காரணம் என்று கருதப்படுகிறது. மோடி அலை எதிர்ப்பு அலையாக மாறிவிட்டதாக கருதும் ஆர்.எஸ்.எஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எதிர்கட்சிகளின் ஆதரவை பெறவும் முயற்சி மேற்கொள்கிறது என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாக்புரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் அதன் தலைவர் மோகன் பகவத் உரையாற்றிய போது, ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, விஷ்வ ஹிந்து பரிஷத், சிவ சேனா உள்ளிட்ட இந்துத்துவா கொள்கைகளை கொண்ட கட்சிகளும் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் சாதுக்களிடம் கடந்த வாரம் கலந்து கொண்டு பேசிய மோகன் பகவத், மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் எனவும், அப்போது தான் ராமர் கோயிலை கட்ட முடியும் என்றும் தெரிவித்தார். மேலும் அதுவரை ராமர் கோயில் தொடர்பான போராட்டதை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், விஹெச்பி, ராமர் கோயில் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தது. பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்க்கு இடையேயான மோதலே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் கூறிய போது, கடந்த மக்களவை தேர்தலில் வீசிய மோடி அலை தற்போது எதிர்ப்பு அலையாக மாறி விட்டதாகவும், இது பாஜகவின் வெற்றியை பாதிக்காமால் இருக்க போராட்டத்தை ஒத்தி வைத்ததாகவும் தெரிவித்தனர். எதிர்கட்சியினர் இடையேயும் வலுவான கூட்டணி அமையாததால், வரும் தேர்தலில் தொங்கு பாராளுமன்றமே அமைய வாய்ப்புள்ளதாகவும் ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது. மேலும் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்காமல் எதிர்க்கட்சித் தலைவர்கள் வேறு தலைவர்களுக்கு ஆதரவளிக்கும் நிலை உருவாகவும் வாய்ப்புள்ளது.

மோடியை மீண்டும் பிரதமராக அமர்த்த பாஜக கூட்டணியில் ஏற்கனவே எதிர்ப்புக்கள் தொடங்கி விட்ட நிலையில், நிதின் கட்கரியை முன்னிறுத்தி மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜகவை ஆட்சியில் அமர்த்த ஆர்.எஸ்.எஸ் முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக பாஜக கூட்டணிக்கட்சிகளுடன் ஆர்.எஸ்.எஸ் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சமாஜ்வாதி கட்சி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் தவிர, எதிர்க்கட்சிகளில் பெரும்பாலானவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்துள்ளன. அவர்களின் அதரவை பெறுவதோடு, தமிழகத்தில் அதிக தொகுதிகளில் வென்ற திமுகவின் ஆதரவையும் ஆர்.எஸ்.எஸ் பெற முயல்கிறது என்றும் கூறப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Ramya