பயிற்சியாளர் அச்ரேக்கரின் இறுதி ஊர்வலம்... கண்ணீருடன் பாடையை சுமந்த சச்சின்

Classic

பயிற்சியாளரின் மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் சச்சின் டெண்டுல்கர் பாடையை சுமந்து சென்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. 

உணர்வுப்பூர்வமான உருக்கம்: 
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளர் ராமகாந்த் அக்ரேக்கர் கடந்த புதன்கிழமை மறைந்தார். அவரது இறுதிச்சடங்குகள் மும்பையில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஷர்தாஷ்ரம் பள்ளியை சேர்ந்த  முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் ராம்காந்த் அச்ரேக்கரின் இறுதி பயணத்தில் கலந்து கொண்டனர். அப்போது பல்வேறு உணர்வுப்பூர்வமான நிகழ்வுகள் அரங்கேறின.

 

பயிற்சியாளர் அச்ரேக்கர் மறைவு :

ராமகாந்த் அச்ரேக்கர் மிகச்சிறந்த பயிற்சியாளராக விளங்கினார். சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளீ, அஜித் அகர்கர் உள்ளிட்ட புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சியளித்த பெருமை இவரையே சேரும். 1990-ஆம் ஆண்டு இவருக்கு துரோணாச்சாரியா விருது வழங்கப்பட்டது. 2010-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. அதே ஆண்டு அச்ரேக்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை ராமகாந்த் அக்ரேக்கர் தனது 86-ஆவது வயதில் மும்பையில் காலமானார்.

 

 

கண்ணீர் கடலில் சிவாஜி பார்க் மைதானம்:

தனது பயிற்சியாளரின் மறைவை தாங்கிக்கொள்ள முடியாத சச்சின் டெண்டுல்கருக்கு கடலாக ஓடிய கண்ணீரை நிறுத்துவது கொஞ்சம் கடினமானதாக தான் இருந்தது . வினோத் காம்ப்ளீ, பிரவின் ஆம்ரே உள்ளிட்டவர்கள் தேம்பித்தேம்பி அழுதவாறே நின்று கொண்டிருந்தனர். அருகில் இருந்த ரமேஷ் பவாரை தொலைக்காட்சி குழுவினர் சூழ்ந்ததால் தனது இறுதி மரியாதையை செலுத்த முடியாமல் தவித்தார். 

 

 

இறுதிப்பயணத்தில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்:

சச்சின், காம்ப்ளீ, ஆம்ரே ஆகியோர் ஒருபுறம் அச்ரேக்கர் உடல் இருந்த பாடையை தூக்கி சுமக்க, சந்திரகாந்த் பண்டிட், பால்வீந்தர் சந்து, சமீர் திகே ஆகியோர் அவரின் உடலை சுமந்தவாறு சிவாஜி பார்க் மைதானத்தை வலம் வந்தனர். இறுதியாக, சச்சின் தனது பயிற்சியாளரின் பாதங்களை தொட்டு வணங்கி தனது கைகளிலிருந்த மலர்களை அவர் மீது தூவி மரியாதை செலுத்தினார். ஆயிரக்கணக்கானோர் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டு தங்களது இறுதி மரியாதையை அச்ரேக்கருக்கு செலுத்தினர். அச்ரேக்கரின் ஆன்மா அமைதியாக இருக்கட்டும்... நாமும் இறைவனை வேண்டிக்கொள்வோம்.

News Counter: 
100
Loading...

aravind