செந்தில் பாலாஜியின் சுவாரஸ்ய கதை... ஜெயிக்கும் குதிரையின் மீது பந்தயம்

share on:
Classic

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக-வில் இணைந்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'கன்ட்டன்ட்' கடவுள்கள்:
தமிழகத்தில் கட்சி விட்டு கட்சி மாறுவதில் யார் திறமையானவர்? என்று கேட்டால் அதற்கு அனைத்து நெட்டிசன்களும் சொல்லும் ஒரே பதில் வைகோ. ஆனால், இப்போதைய தமிழக அரசியல் சூழலில் வைகோவின் இடத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நிரப்பியிருப்பதாக சமூக வலைதளவாசிகள் வசைபாடி வருகின்றனர். வைகோ, ஹெச்.ராஜா, சீமான் உள்ளிட்ட 'கன்ட்டன்டுகளின் கடவுள்கள்' பட்டியலில் தற்போது புதுவரவாக இணைந்துள்ளார் செந்தில் பாலாஜி. 

யார் இந்த செந்தில் பாலாஜி:
கடந்த 1995-ஆம் ஆண்டு திமுக-வில் இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கிய செந்தில் பாலாஜி, கடந்த 2000-ஆம் ஆண்டு அதிமுக-வில் இணைந்தார். இந்த இணைவிற்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து, அதாவது 2011-ஆம் ஆண்டில் அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக அவதரித்தார். 

கட்சித்தாவும் எண்ணம் உதயம்:
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு டிடிவி தினகரன் அணிக்கு மாறிய செந்தில் பாலாஜி, தகுதி நீக்கத்திற்கு ஆளானார். இதனால் தினகரனுக்கும் செந்தில் பாலாஜிக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக கிசுகிசுக்கள் உலா வந்தன. இந்த கருத்து வேறுபாடு நாள்பட நாள்பட விரிவடைந்ததால் வேறு கட்சிக்கு தாவி விடுவோமா? என்ற எண்ணம் தோன்றியது செந்தில் பாலாஜிக்கு. 

தாய் கட்சிக்கு மறுபிரவேசம்:
கட்சி மாற வேண்டும் என்று முடிவு செய்ததன் பிறகு தாய் கழகமான திமுக-வில் இணையலாமா? அல்லது தந்தை கழகமான அதிமுக-வில் இணையலாமா? என்ற குழப்பம் உதித்தது செந்திலுக்கு. இறுதியில், 'பந்தயத்தில் வெற்றி பெறும் குதிரையின் மீது பாதுகாப்பாக அமர்ந்து விடுவோம்' என்ற எண்ணத்தில் தாய் கட்சியான திமுக-வில் தற்போது இணைந்து விட்டார். 

தவிடுபொடியான தங்கம்:
'திமுக-வில் செந்தில் பாலாஜி இணையவே மாட்டார்' என தினகரன் தரப்பினர் திட்டவட்டமாக தெரிவித்து வந்தனர். குறிப்பாக, 'செந்தில் பாலாஜி திமுக-விற்கு செல்கிறார்'  என ஊடகங்கள் மட்டும் தான் வதந்தியை பரப்பி வருவதாக தங்க தமிழ்ச்செல்வன் தொடர்ச்சியாக கூறி வந்தார். ஆனால், செந்தில் திமுக-வில் இணைந்திருப்பதால் 'தங்கத்தின் தரம்' இப்போது தவிடுபொடியாகி உள்ளது. மேலும், உரிய தகவல் இல்லாமல் ஊடகங்களும் பத்திரிகைகளும் எந்த செய்தியையும் வெளியிடாது என்ற நம்பகத்தன்மைக்கு வலு சேர்ந்துள்ளது. 

வரவேற்பும், விமர்சனமும்:
'செந்தில் பாலாஜி திமுக-வில் இணையப்போகிறார்' என்ற தகவல் உறுதியான அடுத்த நொடியே, தினகரன் விமர்சன அறிக்கையை வெளியிட்டு விட்டார். அந்த அறிக்கையில், செந்திலை எவ்வளவு 'டேமேஜ்' செய்ய முடியுமோ அவ்வளவு 'டேமேஜ்' செய்தார்.

மறுபுறம், செந்தில் பாலாஜி போன்றவர்களை இழுத்து திமுக வலுவடையை முயற்சிக்கிறது என ஆளும் அதிமுக-வினர் விமர்சித்து வருகின்றனர். எது எப்படியோ, இடத்தை தக்க வைத்துக்கொள்ள விழைவது அரசியல்வாதிகளுக்கே உண்டான குணம் என்பது செந்தில் பாலாஜியின் திமுக இணைவின் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதியாகி உள்ளது. 

News Counter: 
100
Loading...

mayakumar