கோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..!!

share on:
Classic

கோடை விடுமுறையை கழிக்க சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர்.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலின், இயற்கை எழில் கொஞ்சும் அழகைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளதால் கோடை கால  சீசன் களைகட்டியுள்ளது. லேசான வெயிலும் அவ்வப்போது பொழியும் இதமான சாரல் மழையும், குளிர்ந்த காற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு விதமான புத்துணர்ச்சியை உருவாக்குகிறது. வெண் போர்வை போர்தியது போன்று வானில் விரிந்துள்ள மேகங்கள், தலையை உரசிச் செல்வது சுற்றுலாப் பயணிகளை பிரம்மிக்க வைக்கிறது. 

 

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் வாட்டி வரும் இந்த கோடை விடுமுறை காலத்தை, இதமான, குளுமையான சூழலில் குதூகலமாக கொண்டாட தமிழகம் மட்டுமின்றி  பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளனர். இவர்கள் பசுமை போர்த்திய மலைகளின் வனப்பையும், இயற்கை அழகை ரசித்தபடியே புகைப்படம் எடுத்து  மகிழ்ச்சியடைகின்றனர்.  இங்கு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் ஆங்காங்கே பூத்து குலுங்குவது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளது. 

மேலும் இங்குள்ள  மோயர் பாயிண்ட், குணா குகை,  பைன் மரக்காடுகள் , வெள்ளி நீர்வீழ்ச்சி , தூண் பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு  ஆகியவை  சுற்றுலா பயணிகளை  வெகுவாக கவர்ந்துள்ளன. மலர்கண்காட்சி தொடங்கியுள்ள பிரயண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கியுள்ள பலவிதமான வண்ண வண்ண மலர்களை கண்டு ரசிப்பதோடு, அவற்றுடன் செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர். நகரின் மையப் பகுதியில் உள்ள ஏரியில் படகு சவாரி, சாலையில் குதிரை சவாரி , சைக்கிள் சவாரி என வித்தியாசமான அனுபவங்களும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது. மொத்தத்தில் சிலு சிலு காற்றுடன் உடலுக்கு குளுமையும், கண்களுக்கு இனிமையும் கொடுத்து, சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சிபுத்துணர்ச்சியை கொடுப்பதில் கொடைக்கானலுக்கு இணை கொடைக்கானலே..... 

 

News Counter: 
100
Loading...

Ramya