மக்களைவை தேர்தல் 2019 : மோடிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கப் போவது மூன்று பெண்களா?..

share on:
Classic

விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. தேர்தல் கூட்டணிகள் பல்வேறு அரசியல் கட்சிகள் பல வியூகங்களை வகுத்து வருகின்றனர். இந்நிலையில் வெவ்வேறு சமூக பிண்ணனியிலிருந்து அரசியலுக்கு வந்த மூன்று பெண் தலைவர்கள் பிரதமர் இரண்டாவது முறை பிரதமராக பங்கேற்பதற்கு மிகப்பெரிய அச்சுறுத்துத்தலாக இருப்பார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். யார் அந்த மூன்று பெண் தலைவர்கள்?.. ஏன் அவர்களுக்கு இந்த மக்களவைத் தேர்தலில் இவ்வளவு முக்கியத்துவம்?.. பாஜகவில் வலிமைமிக்க பெண் தலைவர்கள் இல்லையா?.. பெண்களுக்கு முக்கியத்துவம தரும் திட்டங்களை அறிமுகப்படுத்தும் மோடிக்கு பெண்களின் ஆதரவு இல்லையா?.. கடந்த மக்களவைத் தேர்தலில் வீசிய மோடி அலை இந்த தேர்தலிலும் வீசுமா?..இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..

யார் அந்த மூன்று தலைவர்கள்:

இந்தியா சுதந்திரம் அடைந்த பின், அதிக காலம் இந்தியாவை ஆட்சி செய்த நேரு குடும்பத்தில் இருந்து வந்த பிரியங்கா காந்தி கடந்த ஜனவரியில் அரசியலில் நுழைந்தார். நாட்டின் பிரபலமான உத்திரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அவருக்கு பொறுப்பு வழங்கியது. மற்ற இரண்டு அரசியல் முத்த பெண் தலைவர்கள் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி ஆகியோரும் மோடி இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்கக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர். மம்தா - மாயாவதிக்குள் எந்த வித கூட்டணியும் தற்போது வரை இல்லாத நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து மிகப்பெரிய அளவிலான கூட்டணி அமைக்க முயற்சித்து வருகின்றனர்.

 

வலிமைமிக்க பெண் தலைவர்கள் இல்லாத பாஜக:

தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட எதிர்க்கட்சிகள் அதிகமான வலிமைமிக்க பெண் தலைவர்களை கொண்டுள்ளதாக முன்னாள் நிதி அமைச்சரும், பாஜகவிலிருந்து விலகியவருமான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். எனவே வாக்காளர்களின் குறிப்பாக பெண் வாக்களர்களின் நம்பிக்கையை பெண் அரசியல் தலைவர்களால் எளிதில் பெற முடியும் எனவும் அவர் கூறியிருக்கிறார். மேலும் அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் நாட்டின் முக்கிய மாநிலங்களை ஆட்சி செய்யும் வாய்ப்பை பாஜக இழந்துள்ளதால் அவர்கள் வருத்தத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

பெண் தலைவர்களின் எழுச்சி :
47 வயதான பிரியங்கா காந்தியின் அரசியல் நுழைவு காங்கிரஸ் கட்சியினரால் பெரிதும் கொண்டாடப்படுகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை பிரியங்கா நினைவுப்படுத்துவதாகவும், அதனால் அவரால் எளிதாக வாக்காளர்களின் நன்மதிப்பை பெற முடியும் என்றும் அக்கட்சி கருதுகிறது. மம்தா, மாயாவதி இருவரும் பிரியங்காவை விட அதிக அரசியல் அனுபவம் கொண்டுள்ளதால் அவர்களின் இருவருமே எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 

பாஜகவிற்கு எதிரான முயற்சி :

63 வயதான மாயாவதி கடந்த மாதம் சமாஜ்வாதி கட்சியுடன் தனது கூட்டணியை அறிவித்தார். தாழ்ந்த சாதியினர், தலித்கள், முஸ்லீம்கள் ஆகியோரின் பிரதிநிதியாக அவர் பார்க்கப்படுகிறார். 64 வயதான மம்தா பானர்ஜி இரண்டு முறை ரயில்வே அமைச்சராக பதவி வகித்துள்ளார். அவரால் கடந்த மாதம் நடத்தப்பட்ட பாஜகவிற்கு எதிரான பிரம்மாண்ட அரசியல் பேரணியில்  லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்றதால் பாஜகவிற்கு சிறிது பயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

பாஜகவின் நிலைப்பாடு:

பெண்களுக்கு எதிரானவர் என்று மோடி மீது குற்றச்சாட்டு எழவில்லை. பெண்குழந்தைகள் பாதுகாப்பு, பெண் கல்வி ஆகியவை குறித்த பிரதமர் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். ஏழை பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு, ஏழைகளுக்கு இலவசக் கழிவறைகள் போன்ற திட்டங்கள் பெண்கள் மேம்பாட்டிற்கு வலு சேர்ப்பதாகவே அமைந்தன. 26 அமைச்சர்களை கொண்ட அவரது அமைச்சரவையில் 6 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். எனவே பெண்களுக்கு எதிரான எந்த நிலைப்பாட்டையும் பாஜக அரசு மேற்கொள்ளவில்லை என்று பெண் வாக்காளர்களை ஈர்க்கலாம் என்பது பாஜகவின் நிலைப்பாடாக உள்ளது.

 

காங்கிரஸிற்கு எதிர்ப்பு இல்லை:

காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுடன் நட்பு பாராட்டவே விரும்புகிறது. அதே போல் கூட்டணி அறிவித்த மாயாவதியும், அகிலேஷும் ராகுல் காந்தி, சோனியா காந்தி தொகுதிகளில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்தனர். மம்தா மாநாட்டிலும் காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அதே சமயத்தில் ராகுல், பிரியங்கவுடன் இணைந்து செயல்படுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று மம்தா தரப்பில் கூறப்படுகிறது. 

 

தொடர்ந்து வீசுமா மோடி அலை:

பிரியங்கா காந்தி, மாயாவதி, மம்தா ஆகிய மூவரும் இணைந்து ஒரு வலுவான எதிர்க்கட்சி கூட்டணியில் இருப்பதால் கூடுதல் பலம் என்று கருதப்படுகிறது. பிரியங்காவால் உத்திரப்பிரதேசத்தில் புதிய உத்வேகம் பிறக்கும் என்பதால் அதனால் பெண்கள், இளைஞர்களின் ஆதரவை அதிக அளவில் பெற முடியும். தலித்கள், தாழ்ந்த வகுப்பினர் மற்றும் முஸ்லீம்களின் ஆதரவு மாயாவதிக்கு இருப்பதால் அவரும் அதிக வாக்காளர்களை ஈர்க்கும் சக்தியாக மாறியுள்ளார். மேற்கு வங்கத்தில் 34 ஆண்டு கால ஆட்சியை  முடிவுக்கு கொண்டு வந்த மம்தாவிற்கு இருக்கும் ஆதரவிற்கு சமீபத்தில் பிரம்மாண்ட பேரணியே ஆதாரமாக உள்ளது. எது எப்படியோ கடந்த முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வீசிய மோடி அலை, இந்த தேர்தலிலும் வீசுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

News Counter: 
100
Loading...

aravind