மாறிய தமிழக வரைபடம்!!.. யாருக்கு லாபம்..?

share on:
Classic

நிர்வாக திறனுக்காக தமிழக அரசு தொடர்ந்து பல மாவட்டங்களை பிரித்து, புதிய மாவட்டங்களை உருவாக்கி வருகிறது. அந்த வரிசையில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது,  பல புதிய திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து உத்தரவிட்டுள்ளார். இந்த மாவட்டங்களை பிரிக்க வேண்டிய அவசியம் என்ன, அதனை பிரிப்பதன் மூலம் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளையும், அதை சுற்றியுள்ள அரசியலையும் விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..

 

இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு கோவை மற்றும் ஈரோட்டிலிருந்து சில பகுதிகளை இணைத்து, திருப்பூர் 32-வது மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அதையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு புதிய மாவட்டமும் தமிழகத்தில் உருவாக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம், விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார், மேலும் நடந்த முடிந்த சட்டப்பேரவை கூட்டதொடரில், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசியையும், காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டையும் பிரித்து புதிய மாவட்டங்களாக முதலமைச்சர் அறிவித்து இருந்தார். 

இந்த வரிசையில் சுதந்திர தினத்தையொட்டி கோட்டையில் கொடியேற்றிய பிறகு பேசிய முதலமைச்சர், பல்வேறு திட்டங்களை அறிவித்ததோடு நிர்வாக திறனுக்காக வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரித்து ராணிபேட்டை, திருப்பத்தூர் ஆகியவை புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி வேலூர் மாவட்டமானது, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வேலூர் மாவட்டத்தில்  பேர்ணாம்பட்டு, குடியாத்தம், காட்பாடி, வேலூர் ஆகிய தாலுக்காக்கள் அடங்குகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய தாலுக்காக்கள் இணைக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, வாலாஜா, நெமிலி, அரக்கோணம் ஆகிய தாலுக்காக்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழக வரைபடத்தில் தற்போது 37 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இது  பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும், கொங்கு பகுதி  மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூற வேண்டும். கோவையிலிருந்து பொள்ளாச்சியை பிரித்து புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில், அவர்களது கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்படுவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதியில் இருந்து பல முக்கிய அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டும், இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதே அம்மக்களின் ஏமாற்றமாக உள்ளது.

புதிய மாவட்டங்களை உருவாக்குவதன் மூலம், அப்பகுதியில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். புதிய கல்லூரிகள், தொழிற்சாலைகள்  போன்றவை உருவாக்கப்பட்டு கல்வித்தரம் உயர்வதோடு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். இதன்மூலம் மக்களின் வாழ்க்கைதரம் உயரும் என்பதே அரசின் நோக்கமாக கருதப்படுகிறது. மேலும் எல்லைகளை குறுக்குவதன் மூலம் அரசின் திட்டங்களை மாவட்ட நிர்வாகங்களை கொண்டு, முழுமையாக மக்களிடம் கொண்டு செல்லலாம் எனவும் அரசு கருதுகிறது. 

இதேசமயம், மாவட்டங்களை பிரிப்பதில் உள்நோக்கம் இருப்பதாக பல எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதன்படி அதிமுக கட்சியில் பதவிகள் தொடர்பான உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வரும் நிலையில், கட்சி பிரமுகர்களை சமாதானபடுத்தவே முதலமைச்சர் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அதன்படி புதிய மாவட்டங்களை உருவாக்கி, அவர்களுக்கு பதவிகளை வழங்கி கட்சியை நிலை பெற செய்வதோடு, கட்சியை தனதாக்கி கொள்ளவும் முதலமைச்சர் திட்டம் தீட்டி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க, மாவட்டங்களை கணக்கிட்டே உலக வங்கிகள் கடன் வழங்கி வருவதால், அதனை கருத்தில் கொண்டு கொள்ளையடிக்கவே,  அரசு இந்த முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும் சில கட்சிகள்  குற்றம்சாட்டி வருகின்றன. புதிய மாவட்டங்கள் உருவானதில் பல சாதக பாதகங்கள் இருந்தாலும், அதன் உண்மையான விளைவு யாதென,  என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். மாறியது தமிழக வரைபடமாக இல்லாமல், தமிழகத்தின் தலையெழுத்தாக இருந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே!!!...... பொருத்திருந்து பார்ப்போம் இந்த மாற்றம் யாருக்கான லாபம் என்பதை??....

News Counter: 
100
Loading...

Saravanan