கும்பகோணம் தீ விபத்தின் நினைவு தினம்..உலகையே உறைய வைத்த கோர சம்பவம்..!

share on:
Classic

94 பிஞ்சிகளை விழுங்கி உலகையே உறைய வைத்த கும்பகோணம் தீ விபத்தின் 15ம் ஆண்டு நினைவு தினம் இன்று..! இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் தீராத வடுவாக இருக்கும் அந்த சம்பவத்தை சற்று நினைவு கூருவோம்.

 

ஜூலை 16, 2004ஆம் ஆண்டு.. கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா தொடக்க பள்ளியின் சமையலறையில் இருந்து வெளியேறியது கரும்புகை. சுதாரிப்பதற்குள் கொளுந்து விட்டு எரிந்த தீ மளமளவென கீற்றுக் கூரைக்கு பரவியது. தப்ப இடமின்றி தொடக்கப் பள்ளியில் பயின்ற 94 குழந்தைகளும் கண்னிமைக்கும் நேரத்தில் கரிக் கட்டைகளாகினர். கொஞ்சும் நடையில் மழலை மொழியில் ஓடி ஆடிய பிஞ்சுகள், துடி துடித்து மாண்டது உலகையே பேரதிர்ச்சியில் உறைய வைத்தது. இந்த கோர நிகழ்வின் 15ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. உயிர்நீத்த குழந்தைகளின் பெற்றோர் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தீ விபத்து சம்பவத்தில் 23 பேர் மீது அப்போதைய அரசு வழக்குப்பதிவு செய்தது. வழக்கு விசாரணையின் போது இருவர் இறந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 21 பேர் மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம், பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு  ஆயுள் தண்டனையும், சுமார் 52 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தது. மேலும் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியை, மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி உட்பட 9 பேருக்கு தலா 5 ஆண்டு சிறைத் தண்டனையும், மாவட்ட முன்னாள் தொடக்கக்கல்வி அலுவலர் மாதவன் உள்பட 11 பேரை விடுதலை செய்தும் கடந்த 2014–ம் ஆண்டு தீர்ப்பளித்தது தஞ்சை நீதிமன்றம். 

 

இந்த 11 பேர் விடுதலைக்கு எதிரான  மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்ற 9 பேரில் வயது மூப்பைக் காரணம் காட்டி ஏழு பேரை விடுதலை
செய்தது. 94 குழந்தைகள் உயிரிழந்த இந்த நாளை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் 15 ஆண்டுக் கோரிக்கையாக உள்ளது.

 

பொம்மைகளாய் பள்ளிக்குச் சென்ற வாண்டுகள், கரி கட்டைகளாய் வீடு திரும்பிய அந்த நாளை யார் தான் எளிதில் மறந்து விட முடியும்..?

 

News Counter: 
100
Loading...

aravind