மறக்கவே முடியாத மக்கள் திலகம்...எம்.ஜி.ஆர்...!

share on:
Classic

1936 ஆம் ஆண்டு தொடங்கி, 1987 ஆம் ஆண்டு வரை தன்னிரகற்ற கதாநாயகனாக, வெற்றிகரமான இயக்குநராக, சிறந்த தயாரிப்பாளராக, தமிழ் திரையுலகத்தில் முடி சூடா மன்னனாக... ராஜபாட்டை நடத்திய எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி, அவரின் திரைப் பயணம் பற்றிய ஒரு சிறப்பு பார்வையை இப்போது பார்க்கலாம்...!

கேரள மாநிலம் கொல்லங்கோடு பக்கம் வடவனூர் மருதூர் கோபாலமேனன் - சத்யபாமா தம்பதிக்கு சக்கரபாணி - ராமச்சந்திரன் என இரு பிள்ளைகள். பள்ளி தலைமையாசிரியராக வேலை செய்து வந்த கோபால மேனனின் திடீர் மறைவுக்குப் பிறகு, பிள்ளைகளை வளர்க்க சிரமப்பட்டார் தாய் சத்யபாமா,சொந்த பந்தங்கள் முன்னால் கஷ்ட ஜீவனம் நடத்த பிரியப் படாமல், தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு குடிபெயர்ந்தார்!

 

அந்தக் காலத்தில் ஏழைப் பிள்ளைகளுக்கு புகலிடமாக இருந்தது நாடக மேடைகள் தான்! நாடகத்தில் பின் பாட்டுப்பாடி வந்த குடும்ப நண்பர் நாராயண நாயரின் சிபாரிசில் ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி’யில் தன் பிள்ளைச் செல்வங்கள் இருவரையும் கலைத்தாயின் கைகளில் காணிக்கையாக்கினார் சத்யபாமா. இரு சகோதரர்களும் ஊர் ஊராகப் போய் நாடகத்தில் நடித்து, அந்த வருமானத்தை தாய்க்கு அனுப்பி வைத்தார்கள்! சக்கரபாணி சின்ன சின்ன வேடங்களில் நடிக்க, ராஜபார்ட் என சொல்லப்படும் கதாநாயகனுக்கு ஜோடியாக; பெண் வேடமிட்டு நடித்தார் எம்.ஜி.ஆர். 

பிறகு,‘பாய்ஸ் கம்பெனி’யில் சேர்ந்து ராஜபார்ட் நடிகராக உயர்ந்தார். இதையடுத்து, அப்போது பிரபல இருந்த நடிகர் எம்.கே.ராதாவின் சிபாரிசில் 1936 ஆம் ஆண்டு ‘சதிலீலாவதி’படத்தின் மூலமாக திரையுலகத்துக்குள் அடியெடுத்து வைத்தார் எம்.ஜி.ஆர். அந்தப் படத்தில் எம்.கே.ராதா ஹீரோவாக நடிக்க, ரெங்கயா நாயுடு என்கிற போலீஸாக சின்ன வேடத்தில் நடித்தார் எம்.ஜி.ஆர். இப்படித்தான் எம்.ஜி.ஆரின் திரைப் பயணம் தொடங்கியது!  

 

ராஜகுமாரி: 
 

‘சதிலீலாவதி’யில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் கான்ஸ்டபிளாக தனது கலைப்பயணத்தை துவங்கிய எம்.ஜி.ஆர், பிறகு ‘மாயா மச்சிந்திரா’, ‘அசோக்குமார்’,  ‘சாலிவாகனன்’, ‘இரு சகோதரர்கள்’ உள்ளிட்ட சில படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் வந்துபோனார்!

சொந்தக் குரலில் பாடுவதையே கதாநாயகனுக்கான தகுதியாக நினைத்த தயாரிப்பாளர் - இயக்குனர்களின் ரசனை மாறியது! வீரசாகசம் செய்யும் ஹீரோவை விரும்ப ஆரம்பித்தனர். ஆகவே; எம்.ஜி.ஆருக்கு ஹீரோ சான்ஸ் அடித்தது! 1947 ஆம் ஆண்டு ‘ராஜகுமாரி’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஹீரோ கிரீடம் சூட்டப்பட்டது. 

 

‘ராஜகுமாரி’யில் காதல் காட்சிகளில் மட்டுமல்லாமல், வாளெடுத்து வீசும் சண்டைக் காட்சிகளிலும் முத்திரை பதித்த எம்.ஜி.ஆரை, ரசிகர்கள் ஹீரோவாக ஏற்றுக் கொண்டனர். இதனால், தமிழ் சினிமா உலகின் ஒரு மாபெரும் சரித்திர நாயகனாக விளங்கிய எம்.ஜி.ஆர், தமிழ் திரையுலகத்துக்கு கிடைத்தார். 

இந்த‘ராஜகுமாரி’ மூலமாகத் தான் கலைஞர் மு.கருணாநிதி கலைத் துறைக்குள் காலடி வைத்தார். இதில், வசன உதவியாளராக வந்த கருணாநிதி, பிறகு படத்துக்கான மொத்த வசனத்தையும் எழுதினார். ஆனால், அதற்கு இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமியே ஏகபோக உரிமை எடுத்துக் கொண்டார்! 

மந்திரிகுமாரி : 
 

1950 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், கருணாநிதி இருவரின் வாழ்க்கையில் நல்ல திருப்புமுனை ஏற்பட்டது. கருணாநிதி கை வண்ணத்தில் உருவான ‘மந்திரிகுமாரி’ நாடகக் கதையை அதே பெயரிலேயே படமாக எடுக்க முன் வந்தார் மார்டன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம்.‘இதன் நாயகன் வீர மோகன் கதாப்பாத்திரத்துக்கு எம்.ஜி.ஆர். கச்சிதமாக இருப்பார்’ என சிபாரிசு செய்து ’மந்திரிகுமாரி’ பட வாய்ப்பை எம்ஜிஆருக்கு வாங்கிக் கொடுத்தார் கருணாநிதி. 

 

‘மந்திரிகுமாரி’ திரைப் படம் அபாரமான வெற்றியைப் பெற்று, எம்.ஜி.ஆர் - கருணாநிதி இருவரையும் முன் வரிசைக்கு கொண்டு போனது.‘மந்திரிகுமாரி’யின் வெற்றிக்குப் பிறகு எம்.ஜி.ஆர் - கருணாநிதி கூட்டணியில் வந்த ‘மருதநாட்டு இளவரசி’ படமும்  சக்கை போடு போட்டது! ஒரே வருடத்தில் ‘மருத நாட்டு இளவரசி, ‘மந்திரிகுமாரி’, ‘மர்ம யோகி’ என ஹாட்ரிக் அடித்த எம்.ஜி.ஆர், நட்சத்திர நாயகனாக மாறினார். 

மலைக்கள்ளன்: 
 

1950 ஆம் ஆண்டில் ‘ஹாட்ரிக்’ அடித்து நட்சத்திர நாயகனாக மாறிய எம்.ஜி.ஆரின் திரை வாழ்வில் ஒரு மறு மலர்ச்சியை தந்தது ‘மலைக்கள்ளன்’ திரைப்படம்! தேசிய கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் நாவலை தழுவி, கருணாநிதி திரைக்கதை - வசனம் தீட்டிய  ‘மலைக்கள்ளன்’ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம்... என 6 மொழிகளில் வெளியாகி, அத்தனை மொழிகளிலும் வெற்றி வாகை சூடியது. மக்கள் செல்வாக்கைப் பெற்ற ‘மலைக்கள்ளன்’ படத்துக்கு, சிறந்த படத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது. ‘மலைக்கள்ளன்’ தான் ‘தேசிய விருது பெற்ற முதல் தமிழ் படம்’ என்பது குறிப்பிட தகுந்தது. 

 

எம்.ஜி.ஆருடன், பானுமதி ஜோடி சேர்ந்த முதல் படமும் இது தான்! இந்த காம்பினேஷன், ராசியான ஜோடியாக மாறி, பல படங்களில் இணைந்து நடித்தனர். ‘மலைக்கள்ளன்’ படத்தில் வரும்“எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...!” என்கிற தத்துவப் பாடல் எழுச்சி கீதமாகவே ஒலித்தது! இதற்குப் பிறகு தான் எம்.ஜி.ஆர், தன் படங்களில் இதுபோன்ற ஒரு தத்துவப் பாடல் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்!

மதுரை வீரன்:
 

தென்மாவட்டத்து மக்களின் மனதில் குலதெய்வமாக குடிகொண்டிருக்கும் ‘மதுரை வீரன்’ கதைக்குள் வெற்றிக்கான அடையாளங்களைக் கண்ட எம்.ஜி.ஆர், ‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ லேனா செட்டியாரிடம் எடுத்து சொல்ல,‘மதுரை வீரன்’ என்கிற பெயரிலேயே திரைப் படமாக தயரானது. உண்மை சம்பவத்தைக் கொண்ட இந்தக் கதைக்கு, கவியரசு கண்ணதாசன் திரைக்கதை - வசனம் எழுதி தர, யோகானந்த் இயக்கினார்.1956 ஆம் ஆண்டு வெளி வந்த ‘மதுரை வீரன்’வசூலில் சாதனை படைத்து, எம்.ஜி.ஆரை வசூல் சக்கரவர்த்தியாக மாற்றியது. இதன் மூலமாக தென் மாவட்டத்து மக்களின் அன்பையும், அசைக்கவே முடியாத செல்வாக்கையும்  பெற்றார் எம்.ஜி.ஆர்.

 

இதில் பொம்மியாக பானுமதியும், வெள்ளையம்மாவாக பத்மினியும் நடித்திருந்தனர். இதற்குப் பிறகு தான், தன் படங்களில் இரண்டு நாயகிகள் இருக்க வேண்டுமென்கிற உத்தரவு போட்டார் எம்.ஜி.ஆர். 

நாடோடி மன்னன்: 
 

1950 ஆம் ஆண்டுகளில் வந்த எம்.ஜி.ஆரின் படங்கள் அத்தனையும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலில் சக்கை போடு போட்டன. இதை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த எம்.ஜி.ஆர், டெக்னிக்கலான விஷயங்களில் ஆர்வம் காட்டித் தன் திறமையை வளப்படுத்திக் கொண்டு, இயக்குனராக மாற ஆசைப்பட்டார்! அதை தனது லட்சியப் படமாகவே கருதிய எம்.ஜி.ஆர், அந்தப் படத்தை இயக்குவதோடு தானே சொந்தமாகத் தயாரிக்கவும் முடிவு செய்தார். அப்போது உதயமானது தான் ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்’.

எம்.ஜி.ஆர், முதன் முறையாக இரட்டை வேடமேற்று, இயக்கி, தயாரித்த அந்தப் படம் தான் ‘நாடோடி மன்னன்’! அதுவரை தான் சம்பாதித்த செல்வம், செல்வாக்கு அத்தனையும் பணயமாக வைத்து, “ஜெயித்தால் மன்னன், இல்லையென்றால் நாடோடி!” என்கிற சூளுரையோடு களம் இறங்கினார் எம்.ஜி.ஆர்.

 

‘நாடோடி மன்னன்’ ரிலீஸாகி, வரலாறு காணாத வசூல் சாதனையை செய்தது! அரங்கம் நிறைந்த காட்சிகளாக 200 நாட்களைக் கடந்து ஓடி, எம்.ஜி.ஆரை எட்டிப் பிடிக்க முடியாத உயரத்துக்கு கொண்டு போனது.

கதையில் நல்ல கருத்து இருந்ததைப் போல, பாடல் வரிகளிலும் சீர்திருத்தக் கருத்துக்கள் நிறைந்து இருந்தன. எம்.ஜி.ஆர், முதன் முறையாக முதலமைச்சராக பதவியேற்ற போது, “உங்கள் ஆட்சியின் கொள்கை என்ன?” என பத்திரிகையாளர்கள் கேட்ட போது; இந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய ‘சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி..’ பாடலில் வரும் ‘நானே போடப் போறேன் சட்டம் பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம் நாடு நலம் பெறும் திட்டம்...!’ என்கிற சிறப்பான வரிகளை பதிலாக சொன்னாராம். 

திருடாதே:
 

தமிழ் சினிமாவில் சரித்திரக் கதைப் படங்கள் முடிவுக்கு வந்து, சமூகப் படங்களின் வருகை அதிகமானபோது, ‘திருடாதே’ என்கிற சமூகக் கதைப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் எம்.ஜி.ஆர். அப்போது,‘சரித்திரக் கதைகளில் நடித்த எம்.ஜி.ஆர், சமூக கதைப் படங்களில் எடுபடுவாரா?’ என்கிற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்தது! அதை சவாலாகவே எடுத்துக் கொண்ட எம்.ஜி.ஆர், ‘திருடாதே’ படத்தின் வெற்றி மூலமாக, சமூக கதைப் படங்களிலும் சாதிக்க முடியுமென நிரூபித்தார். எம்.ஜி.ஆர் நடித்த சரித்திரப் படங்களின் சாதனைகளையும் முறியடிக்கும் விதமாக ‘திருடாதே’ திரைப்படம் மாபெரும் வசூல் செய்தது!இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்திருந்தார். 

 

வேட்டைக்காரன்:
 

கதையில், காட்சியமைப்பில், நடிப்பில், பாடல்களில் தனித் தன்மையை கடைபிடித்து வந்த எம்.ஜி.ஆர், கண்ணியம் மாறாத கதாநாயகனாக; ஏழையின் தோழனாக; மது - சூது - மாதுவுக்கு மயங்காத மனிதனாக; பாட்டுடைத் தலைவனாக; சாகசங்கள் புரியும் மாவீரனாக... இப்படியாகப் படத்துக்குப் படம் தனது அடையாளங்களைக் காட்ட ஆரம்பிக்கவே, அது ‘எம்.ஜி.ஆர் ஃபார்முலா’ என பிரபலமானது!

 

அந்த ‘எம்.ஜி.ஆர் ஃபார்முலா’வுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் வந்த ‘வேட்டைக்காரன்’ திரைப்படம், எம்.ஜி.ஆரின் இமேஜை மேலும் ஒரு படி உயர்த்தி, வசூலில் சாதனை படைத்தது.1964 ஆம் ஆண்டில் ‘தேவர் பிலிம்ஸ்’ தயாரிப்பாக வந்த இந்தப் படத்தில் ‘கௌபாய்’ கதாபாத்திரத்தில் தோன்றி அசத்தினார் எம்.ஜி.ஆர்! இதில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக சாவித்திரி நடித்திருந்தார். ‘வேட்டைக்காரன்’ பட வெற்றிக்குப் பிறகு தான் எம்.ஜி.ஆர், தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கினார்.

படகோட்டி:
 

அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு, தமிழ் மக்களின் நெஞ்சங்களில் மாபெரும் சக்தியாக விஸ்வரூபமெடுத்து நின்ற எம்.ஜி.ஆர், மக்களின் மனநிலையை மிகத் தெளிவாய் அளந்து வைத்திருந்தார்! அதன்படி, மீனவ சமுதாயத்தின் போராட்டமான வாழ்க்கையை தத்ரூபமாக சொல்லும் ‘படகோட்டி’யில் நடித்தார். 1964 ஆம் ஆண்டில் வந்த’படகோட்டி’யின் வரலாறு காணாத வெற்றியால் கடல்புறத்தில் வாழும் மீனவ மக்கள் மனதில் நிரந்தரமாக குடியேறினார் எம்.ஜி.ஆர். 

 

எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞரான கண்ணதாசன், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றதும், அந்த இடத்தை கவிஞர் வாலிக்கு கொடுத்து,‘படகோட்டி’யில் எழுத வைத்தார். இதில் வரும் ‘தரைமேல் பிறக்க வைத்தான்’ என்கிற பாடல் மீனவ மக்களின் போராட்டமான வாழ்க்கையை வலியுடன் சொன்னது! தன் ஆற்றல் அத்தனையும் தேக்கி ‘படகோட்டி’க்கு எழுதிய வாலி, மக்கள் மத்தியில் சீக்கிரமே பிரபலமானார். கண்ணதாசனுக்கு சற்றும் குறையாத திறமையைக் கொண்ட வாலி, எம்.ஜி.ஆருக்காக எழுதிக் குவித்த பாடல்கள் ஏராளம்!

எங்க வீட்டுப் பிள்ளை: 
 

வீரன் - கோழை என எம்.ஜி.ஆர்,‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் இரட்டை வேடம் ஏற்று நடித்த போது, அது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக மாறியது.கோழை - வீரன் என மாறுபட்ட கேரக்டர்களின் தன்மையைத் தத்ரூபமாக பிரதிபலித்துக் காட்டிய எம்.ஜி.ஆரை, ரசிகர்கள் கொண்டாடினார்கள். ‘கோழை ராமு’ தனது அப்பாவித் தனத்தால் தாய்க்குலங்களின் ஆதரவைப் பெற்றார், ‘வீரன் இளங்கோ’ தனது வீரசாகசத்தால் விசில் - கைதட்டலை அள்ளிக் கொண்டார்.  

 

1965 ஆம் ஆண்டு நாகி ரெட்டியாரின் விஜயா வாஹினி ஸ்டுடியோ தயாரிப்பாக வந்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ திரைப்படம் 236 நாட்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி; வசூலைக் குவித்தது!

ஆயிரத்தில் ஒருவன்:  
 

பல வெற்றிப் படங்களை எடுத்த இயக்குநர் பி.ஆர்.பந்துலு, சில படங்களின் தோல்வியால் கடன் பட்டு, நொந்து நூலாகி எம்.ஜி.ஆரை நம்பி வந்து, தன் வாழ்க்கையை பணயமாக வைத்து ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை ஆரம்பித்தார்! எம்.ஜி.ஆரின் மேல் வைத்திருந்த நம்பிக்கை பந்துலுவை காப்பாற்றியது! 1965 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’படம், அசுரத்தனமான வெற்றியைப் பெற்று, வசூலில் ‘ரெக்கார்டு பிரேக்’கை ஏற்படுத்தியது. இதில் வந்த லாபத்தை வைத்து கடன்களையெல்லாம் அடைத்து; நிம்மதியானார் பந்துலு. 

 

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் லட்சியம், வீரம், காதல், சாகசம் என்று எல்லாக் கோணங்களிலும் எழுச்சி நாயகனாக வந்து ரசிகர்களை திருப்தி செய்தார் எம்.ஜி.ஆர்.  எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு அடையாளம் காட்டப்பட்டு, அவரின் அரசியல் வாரிசாக மாறி, ஆறு முறை முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்த முதல் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’ தான்! தொடர்ந்து 28 படங்களில் இணைந்து நடித்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை ரசிகர்கள் ராசியான ஜோடியாகக் கொண்டாடினார்கள்.  

அன்பே வா: 
 

1966 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, எம்.ஜி.ஆர். தான் சாதனை நாயகன்! அந்த வருடம் எம்.ஜி.ஆர் நடிப்பில் ஒன்பது படங்கள் வெளிவந்து, அத்தனையும் சூப்பர் ஹிட் ஆனது! எம்.ஜி.ஆர் அப்போது, அரசியலிலும் தீவிரம் காட்டியதால் கட்சி தொண்டர்களின் ஆதரவும் பெருகி, எம்.ஜி.ஆர் படங்களுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த சூழ்நிலையில் ஏ.வி.எம் பட நிறுவனம், எம்.ஜி.ஆரை வைத்து சிறந்த பொழுது போக்குச் சித்திரமாக எடுத்த‘அன்பே வா’படம் அபாரமான வெற்றியைப் பெற்றது. 

 

 
அதிக அளவில் ஆக்‌ஷன், ரொமான்டிக் நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த எம்.ஜி.ஆர், இதில் காமெடியிலும் கலக்கினார். கதாநாயகியாக வந்த சரோஜாதேவியின் கொஞ்சல் பேச்சும், சிணுங்கலும் வாலிப நெஞ்சங்களை வாலிபால் ஆடியது. 

காவல்காரன்:
 

1966 ஆம் ஆண்டில் ‘காவல்காரன்’ படம் தொடங்கிய சமயத்தில்,  நடிகர் எம்.ஆர்.ராதா எதிர்பாராத விதமாக துப்பாகியால் எம்.ஜி.ஆரை சுடவே, படம் முடங்கியது! பிறகு மறுபிறவி எடுத்து வந்த எம்.ஜி.ஆர்,‘காவல்காரன்’ படத்தில் நடித்தார். குண்டடி பட்ட பிறகு அவரின் எடை தான் குறைந்ததே தவிர; வசீகரம் கொஞ்சமும் குறையவில்லை! ஆனால், தெளிவாகப் பேச முடியாமல் திணறினார்!
 

ஆகவே, மருத்துவர்கள் ஆலோசனைப்படி எம்.ஜி.ஆருக்கு பிரத்யேக முறையில் வசனப் பயிற்சி தரப்பட்டது!‘காவல்காரன்’ படத்தில் எம்.ஜி.ஆர் சுடப்படுவதற்கு முன்பு உள்ள பகுதியில்‘கணீர்’ குரலும்; சுடப்பட்ட பிறகு எடுத்த பகுதியில் தெளிவில்லாத குரலும் பதிவாகியிருந்ததால்,‘மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?’என்கிற பயத்திலேயே படத்தை ரிலீஸ் செய்தனர்.ஆனால், குழந்தையின் மழலை மொழியை ரசிக்கும் தாயைப் போல; தாய் உள்ளத்துடன் ஏற்றுக் கொண்ட ரசிகர்கள், ‘காவல்காரன்’படத்தை சூப்பர் ஹிட் ஆக்கினர். எம்.ஜி.ஆர், மறுபிறவி எடுத்து வந்ததை நினைவு படுத்தும் விதமாக வாலி எழுதிய‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது’என்கிற பாடல் பிரபலமாகி படத்துக்கு பலம் கூட்டியது!

ஒளி விளக்கு:
 

கால்ஷீட்டுக்காக பலரும் காத்திருந்த போது, தனது 100-வது படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஜெமினி நிறுவன அதிபர் எஸ்.எஸ்.வாசனுக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர். அப்படி உருவானது தான் ‘ஒளி விளக்கு’ திரைப்படம்!

100-வது படமான‘ஒளிவிளக்கு’ படத்தில், வழக்கமான தனது ஃபார்முலாவை விட்டு வெளியே வந்து, முழுக்க முழுக்க ‘வில்லத்தனமான ஹீரோ’வாக நடித்தார் எம்.ஜி.ஆர். இதற்குமுன் சில படங்களில் ‘கெட்டவன் ரோல்’ செய்திருந்தாலும்; அதை பேலன்ஸ் செய்யும் விதமாக நல்லவன் கதாப்பாத்திரத்தையும் ஏற்றிருப்பார்! ஆனால், இதில் அந்தமாதிரி எதுவும் இல்லாமல் படம் முழுக்க கெட்டவனாகவே வந்தார். ஒரு பாடல் காட்சியில் குடிகாரனாகவும் வந்து அதிர வைத்தார் எம்.ஜி.ஆர்! 

 

குடி போதையில் மிதக்கும் எம்.ஜி.ஆரை, அவரின் மனச்சாட்சியாக பல உருவங்களில் எம்.ஜி.ஆர். தோன்றி ‘தைரியமாகச் சொல், நீ மனிதன் தானா...?’ எனக் கேள்வி கேட்க வைத்து பேலன்ஸ் செய்திருந்ததால் ரசிகர்கள் சமாதானமானார்கள்! 

1984 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மரணப் படுக்கையில் இருந்தபோது இப்படத்தில் இடம் பெற்ற ‘இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு’ பாடல் தான் தமிழகம் எங்கும் பிரார்த்தனைப் பாடலாக ஒலித்தது! 

அடிமைப் பெண்:
 

எம்.ஜி.ஆர் நடித்து இயக்கி தயாரித்த‘நாடோடி மன்னன்’ படத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, 1967 ஆம் ஆண்டில் ‘அடிமைப் பெண்’ படத்தை, நடித்து இயக்கி தயாரித்தார் எம்.ஜி.ஆர். இதில், மூன்று பெண்களை சுற்றி கதை அமைக்கப்படிருந்ததால் ஜெயலலிதா இரட்டை வேடம் ஏற்க, இன்னொரு நாயகியாக ராஜஸ்ரீ நடித்தார். எம்.ஜி.ஆர். சிங்கத்துடன் மோதும் சாகச சண்டைக் காட்சி மெய்சிலிர்க்க வைத்தது!
 

இதில், ஜெயலலிதா முதன் முறையாக இரட்டை வேடம் ஏற்று நடித்தார். தெலுங்குப் படங்களில் பாடி வந்த எஸ்.பி.பால சுப்பிரமணியத்தை, இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார் எம்.ஜி.ஆர். இதில் எஸ்.பி.பால சுப்பிரமணியம் பாடிய ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் சூப்பர் ஹிட் ஆனது.   

மாட்டுக்கார வேலன்:
 

எம்.ஜி.ஆரின் திரைப் படங்களில் ‘மாட்டுக்கார வேலன்’ படத்துக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே சிறப்பான வரவேற்பு இருக்கும்! திரையிடும் போதெல்லாம்  வசூலை அள்ளிக் கொடுக்கும் இந்த‘எவர்கிரீன்’ திரைப் படம், 1970ஆம் ஆண்டில் வெளிவந்தது.
 

இதில், படித்த வக்கீல், படிக்காத மாட்டுக்கார வேலன் என  இரட்டை வேடம் ஏற்று நடித்தார் எம்.ஜி.ஆர். ரசிகர்களைப் பரவசப் படுத்தும் விதத்தில் மாட்டுக்கார வேலன் கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டிருந்ததால்; பட்டி தொட்டியெங்கும் படம் பட்டையைக் கிளப்பியது!ஜெயந்தி பிக்சர்ஸ் சார்பில் என். கனகசபை தயாரிக்க, எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குநரான ப.நீலகண்டன் படத்தை இயக்கியினார். இதில் இரட்டை வேடம் ஏற்று நடித்த எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதாவும், லட்சுமியும் ஜோடிகளாக வந்தனர். 

ரிக்ஷாக்காரன்: 
 

‘எம்.ஜி.ஆர். ஃபார்முலா’என்பது ரசிகர்களால் பரந்த மனதோடு ஏற்றுக் கொள்ளப்பட்ட வெற்றிகரமான ஃபார்முலா ஆகும். அது, மசாலா வட்டத்துக்குள் வந்தாலும், பொழுது போக்குத் தன்மை அதிகம் இருந்ததால் அந்த ‘ஃபார்முலா’வோடு வந்த எம்.ஜி.ஆரின் படங்களை ரசிகர்கள் கொண்டாடினர்.   அதன்படி, ‘எம்.ஜி.ஆர்.ஃபார்முலா’வோடு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது ‘ரிக்ஷாக்காரன்‘ திரைப்படம்.
 

சத்யா மூவிஸ்’ தயாரிப்பில், எம்.கிருஷ்ணன் இயக்கத்தில் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில், ரிக்ஷாக்காரனாக வந்து, ரசிகர்களைக் கவரும் விதத்தில் நடித்திருந்தார் எம்.ஜி.ஆர். செதுக்கியெடுத்த சிற்பம் போல இருந்த நடிகை மஞ்சுளா இந்தப் படத்தில் தான் அறிமுகமானார்! சிறப்பாக நடித்த எம்.ஜி.ஆருக்கு‘பாரத ரத்னா’ விருது வழங்கி  கௌரவித்தது மத்திய அரசு. இதன் மூலம், ‘நாட்டின் மிக உயர்ந்த விருதாக மதிக்கப்படும் ‘பாரத ரத்னா’ விருதைப் பெற்ற முதல் தமிழ் நடிகர்’ என்கிற கௌரத்தைப் பெற்றார் எம்.ஜி.ஆர். 

உலகம் சுற்றும் வாலிபன்:
 

உலக நாடுகளின் அழகுகள் அத்தனையும் கேமராவில் அள்ளிக் கொண்டு வந்து, தமிழ் ரசிகர்களைப் பரவசப்படுத்த நினைத்த எம்.ஜி.ஆர், கிட்டத்தட்ட 50 நாட்கள் வரை வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தினார். ஜப்பான் நாட்டின் ஒசாகோ நகரத்தில் வருடம் தோறும் நடக்கும் உலகப் புகழ்பெற்ற‘எக்ஸ்போ 72’ என்கிற கண்கொள்ளாக் கண்காட்சியையும் படம் பிடித்து வந்தார். ‘வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட இந்தியப் படங்களிலேயே இந்தளவுக்கு பிரம்மாண்டமான படம் எதுவும் இல்லை’ என சொல்லுமளவுக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் இருந்ததால் ரசிகர்கள் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கினார்கள்.

 

இதில், எம்.ஜி.ஆர், விஞ்ஞானி-ரகசியப் புலனாய்வு அதிகாரி என இரட்டை வேடம் ஏற்று நடித்தார்! மஞ்சுளா, சந்திரகலா, தாய்லாந்து அழகி ஆகியோருடன் அறிமுக நாயகியாக லதாவும் நடித்திருந்தார். ‘சிறந்த பொழுது போக்கு சித்திரம்’ என்கிற முத்திரையோடு வந்த இப்படத்துக்கு, இசையும், பாடல்களும் ஜீவனாக இருந்தது. 

உரிமைக்குரல்:
 

கடனில் தத்தளித்த இயக்குநர் பி.ஆர்.பந்துலுவை ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் மூலமாக கை கொடுத்து தூக்கி விட்ட எம்.ஜி.ஆர், இயக்குநர் ஸ்ரீதரையும் கடனிலிருந்து கரையேற்றி விட்டார்! 

புதுமுகங்களை நடிக்க வைத்து பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து வந்த இயக்குநர் ஸ்ரீதர், சொந்தப் படங்கள் எடுத்து பெரிய நஷ்டம் ஏற்பட்டு, மனக் கஷ்டத்தில் தவித்த போது, அவருக்கு உதவும் நோக்கத்தில் ‘உரிமைக்குரல்’ படத்தில் நடித்தார் எம்.ஜி.ஆர்.

 

 
எம்.ஜி.ஆரின் ஃபார்முலாவில், ஸ்ரீதர் இயக்கி, 1974 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தப் படம், சூப்பர் ஹிட்டாகி; எம்.ஜி.ஆரின் புகழ் மேலும் பல மடங்காக உயர்த்தியதோடு, இயக்குநர் ஸ்ரீதரையும் கடனிலிருந்து மீட்டெடுத்தது.
 

இதயக்கனி:
 

“இந்தக் கனி தங்கள் மடியில் விழாதா என எத்தனையோ பேர் தவம் கிடக்கும் வேளையில், அந்தக் கனி என் மடியில் வந்து விழுந்தது. அதை எடுத்து என் இதயத்துள் வைத்துக் கொண்டேன். அப்பொழுது முதல் அது என் இதயக்கனியாக மாறிவிட்டது” என்று அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆருக்கு புகழாரம் சூட்டியதை மக்களுக்கு நினைவூட்டும் விதமாக வைத்த தலைப்பு தான்‘இதயக்கனி’!  இதில் காதல், வீரம், சென்ட்டிமென்ட்ஸ் என எல்லாக் கோணத்திலும் ‘துள்ளல்’ நடிப்பை காட்டி ரசிகர்களை கவர்ந்தார் எம்.ஜி.ஆர். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை படத்துக்கு பலம் கூட்டியது.
 

சினிமா தந்த புகழால் முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்து, அடித்தட்டு மக்களுக்காகவே தனது வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மறைந்து முப்பத்தியொரு ஆண்டுகளாகிறது! ஆனால்; மறக்கவே முடியாத மக்கள் திலகம், தமிழக குடும்பங்களில் ‘எங்கள் வீட்டுப் பிள்ளை’யாகவே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!  

 

 

News Counter: 
100
Loading...

aravind