சுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..!!

share on:
Classic

'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்ட, 2019-ல் உலகில் பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது ஹம்பி.

இந்திய மண்ணின் சிற்பக் கலையையும், கட்டடக் கலையையும் வெளிநாட்டினர் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தாலும், இன்று வரை அஜந்தா, எல்லோரா முதல் தஞ்சைப் பெரியகோயில் வரை அவர்களின் ஆச்சர்யத்துக்கு சான்றாக உள்ளன. கலைச்சின்னமும், சுற்றுலாத்தலமுமான 'ஹம்பி'யும் அதில் ஒன்று.

சுற்றுலா தளங்கள் பட்டியலில் ஹம்பி 2-ஆவது இடம்:
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் அமைந்துள்ளது ஹம்பி. சமீபத்தில், 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்ட, 2019-ல் உலகில் பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது ஹம்பி. முதல் இடத்தை கரீபியன் தீவிலுள்ள 'போர்ட்டோ ரிக்கோ' பிடித்துள்ளது. ஹம்பி, யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.

பெல்லாரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்வது வழக்கம்.  லோட்டஸ் பேலஸ், குயின்ஸ் லேக், நவபிருந்தாவனம், ராமர் வாலியை வதம்செய்த இடம் போன்ற பல்வேறு பிரசித்திபெற்ற இடங்கள் அங்கு அமைந்துள்ளன. அவற்றுள் அவசியம் பார்க்கவேண்டிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம்தான் ஹம்பி. 

ஹம்பியின் சிறப்பம்சங்கள்:
14-ம் நூற்றாண்டில், தென்னிந்தியாவை ஆண்ட விஜயநகரப் பேரரசின் தலைநகரமாக ஹம்பி திகழ்ந்துள்ளது. அவரது ஆட்சிக் காலத்தில் தான் சிறப்பாகத் திட்டமிட்டு, கலை அழகியலோடு உருவாக்கப்பட்டது இந்த நகரம். 41.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள இந்த நகரம், 'துங்கபத்ரா' ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அழகான கற்கோயில்களும், அதில் நுட்பமான கலை நேர்த்தியோடு செதுக்கப்பட்ட சிற்பங்களும், அதைச் சுற்றியுள்ள மலைகளும் காண்போரை பிரமிக்க வைக்கும். இங்குள்ள கல் தேர் இதன் சிறப்புமிக்க அடையாளம். 

இந்த நகருக்குச் செல்லும் வழியில் இயங்கிவரும் உணவகங்களில் காரத்துக்காக பச்சை மிளகாயை அரைத்துக் கொடுக்கின்றனர். ஆம்லெட், ஆஃபாயில் போன்றவற்றுடன், அரைத்த பச்சை மிளகாயையும் சேர்த்தே பரிமாறுகின்றனர். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், ஆண்டுதோறும் கர்நாடக சுற்றுலாத் துறை சார்பில், ‍‌'ஹம்பி விழா' நடத்தப்படுகிறது. அப்போதுமட்டும் கர்நாடக அரசால் பயணிகளுக்கு பல வசதிகள் செய்துதரப்படும். மற்ற நாள்களில் ஹம்பிக்குச் செல்வதற்கு சரியான போக்குவரத்து வசதியோ, சரியான சாலை வசதியோ, தங்கும் வசதியோ எதுவும் கிடையாது.

சுற்றுலா வருபவர்கள், வாடகை வண்டிகளிலோ அல்லது  சொந்த வண்டிகளிலோ செல்லலாம். இந்த நகரத்தைச் சுற்றி ஹம்பி போன்ற கோயில்கள், நகரத்தில் எஞ்சியுள்ள கட்டடங்களின் கலைநயத்தைக் கண்டுகளிக்க ஷேர் ஆட்டோக்கள் வழிவகைசெய்கின்றன. 2016- 17-ம் ஆண்டில், ஹம்பிக்கு 5.35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இதில், 38,000-க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டினர் என்று சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. 

பெல்லாரி விமான நிலையம் :
சுற்றுலாப்பயணிகள் சுற்றுலாத் தலமான ஹம்பிக்கு விமான மார்க்கமாகவோ அல்லது ரயில் மூலமாக அல்லது சாலைப்போக்குவரத்து மூலமாக செல்லலாம். ஹம்பிக்கு அருகிலுள்ள விமான நிலையமாக பெல்லாரி விமான நிலையம் அமைந்துள்ளது. ஹம்பியிலிருந்து 60 கி.மீ தொலைவிலுள்ள இது ஒரு உள் நாட்டு விமான நிலையமாகும். இது தவிர 350 கி.மீ தொலைவில் உள்ள பெங்களூர் விமான நிலையம் சர்வதேச விமான சேவைகளை கொண்டுள்ளது. பெங்களூர் விமான நிலையத்திலிருந்து பல வெளி நாட்டு நகரங்களுக்கும் இந்திய பெருநகரங்களுக்கும் அதிக அளவில் விமான சேவைகள் உள்ளன. 

ஹோஸ்பேட் ரயில் நிலையம் :
ஹம்பியிலிருந்து 13 கி.மீ தொலைவில் ஹோஸ்பேட் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் பெங்களூர், ஹைதராபாத் போன்ற முக்கியமான நகரஙகளுடன் ரயில் சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் வாடகைக் கார் அல்லது வேன்கள் மூலம் ஹம்பியை அடையலாம்.

கர்நாடக அரசு பேருந்து போக்குவரத்து கழகம் கர்நாடக மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் ஹம்பிக்கு பேருந்துகளை இயக்குகின்றது. இந்த பேருந்துகள் குறைவான கட்டணத்துடன் அதே சமயம் சௌகரியமான பிரயாணத்தை அளிக்கின்றன.

போக்குவரத்தில் ஒருசில சிக்கல்கள் இருந்தாலும், ரம்யமாய் மனதை மயக்கும் இந்த ஹம்பி நிச்சயம் பார்க்கவேண்டிய இடம்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan