மூன்றாம் உலகப்போருக்கு முற்றுப்புள்ளி?... டிரம்ப்-கிம் சந்திப்பு தேதி அறிவிப்பு

share on:
Classic

அதிபர்கள் டிரம்ப் - கிம் இடையே இரண்டாவது முறையாக சந்திப்பு நடைபெறும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் சந்திப்பு:
கடந்த சில ஆண்டுகளாகவே வட கொரியாவின் அணு ஆயுதம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என மொத்தம் 6 முறைக்கும் மேலாக பயங்கர சோதனைகள் நடத்தப்பட்டன. இதனால் அமெரிக்கா உட்பட பெரும்பாலான உலக நாடுகள் வட கொரிவை நோக்கி கண்டனக் கணைகளை வீசத்தொடங்கின. இதைத்தொடர்ந்து, அமெரிக்கா - வட கொரியா இடையே மூன்றாம் உலகப்போர் மூண்டு விடுமோ? என்ற அச்சம் உலகளவில் உச்சம் பெற்றது. பின்னர், வட கொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்கை பணிய வைத்தது. இதையடுத்து, கடந்தாண்டு ஜூன் 12-ஆம் தேதியன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே சிங்கப்பூரில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமெரிக்கா மற்றும் வட கொரியாவின் நிகழ்கால அதிபர்கள் இருவர் நேருக்கு நேர் சந்தித்துப் பேசியது இதுவே முதன்முறை. 

 

டிரம்ப் மனமாற்றம்:
சிங்கப்பூர் சந்திப்பின் போது அணு ஆயுத ஒழிப்பிற்கு வட கொரியா ஒப்புக்கொண்டது. இது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானதால் உலக நாடுகள் அனைத்தும் நிம்மதி பெருமூச்சு விட்டன. இதில் இந்தியாவும் அடங்கும். இச்சந்திப்பிற்கு அடுத்தபடியாக டிரம்ப் - கிம் இடையிலான அடுத்த சந்திப்பு எப்போது நடைபெறும் என்பது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகாததால் குழப்பம் தோன்றியது. ஒரு கட்டத்தில், வட கொரியா - அமெரிக்கா இடையே திடீர் வார்த்தைப்போர் ஏற்பட்டதால் உலகப்போர் அச்சம் அகிலத்தை சூழ்ந்துகொண்டது. இந்த பரபரப்பான நிலையில் தான், 2-வது சந்திப்பு குறித்த அறிவிப்பை அதிபர் டிரம்ப் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளார். 

2-வது சந்திப்பு தேதி அறிவிப்பு:
வட கொரிய அதிபருடனான சந்திப்பு குறித்து அதிபர் டிரம்ப் அமெரிக்க மக்களிடம் ஊடகம் மூலமாக நேரலையில் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய டிரம்ப்,
"கடந்த 15 மாதங்களாக வட கொரியா அச்சுறுத்தக்கூடிய எந்தவொரு  ஏவுகணை சோதனையையும் நடத்தவில்லை. இது மட்டுமில்லாமல் வட கொரியாவில் அமைந்திருந்த அணு ஆயுத தயாரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் சோதனை மையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. வட கொரிய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்கர்கள் அனைவரும் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இது போன்ற சில காரணங்களால் எனக்கும் கிம்முக்கும் இடையே 2-வது சந்திப்பு நடைபெறுவது உறுதியாகியுள்ளது. எங்களது சந்திப்பானது வரும் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் வியட்நாமில் நடைபெறும் என தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு கூறினார்.

 

சந்திப்பின் மீதான எதிர்பார்ப்பு:
அணு ஆயுதங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதா? என்ற மிகப்பெரிய வினாவுடன்  வியட்நாம் சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பிலும் அதிபர் டிரம்ப் மகிழ்ச்சி அடைந்துவிட்டார் என்றால் வட கொரியா மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து பொருளாதார தடைகளும் விலக்கிக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ, டிரம்ப்பின் தற்போதைய அறிவிப்பால் சர்வதேச நாடுகள் அனைத்தும் பரஸ்பரம் மகிழ்ச்சி அடைந்துள்ளன. 

News Counter: 
100
Loading...

mayakumar