காஷ்மீரில் இருவர் கடத்தப்பட்டு கொலை : சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் நடைபெற்ற முதல் தீவிரவாத சம்பவம்..

share on:
Classic

ஜம்மு காஷ்மீர் புல்வாமா வனப்பகுதியில் இருந்த குஜ்ஜார் இனத்தை சேர்ந்த இருவர் ஜெயிஷ் இ அமைப்பால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புல்வாமாவில் உள்ள ட்ரால் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அப்துல் காதர், மன்சூ அகமது ஆகிய இருவரும் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். நேற்றிரவு 7.30 மணியளவில் அவர்கள் இருவரையும் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுள்ளனர். இதனையடுத்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில், துப்பாக்கி குண்டு பாய்ந்த அவர்களின் உடல்கள் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டன. இதுதொடர்பாக பேசிய ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் “ ஜெயிஷ் இ தீவிரவாத அமைப்பினர் குஜ்ஜார் இன இளைஞர்களை கடத்தி சென்றனர். இருவரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த தீவிரவாத இயக்கத்தை ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்தார்.

கடந்த 5-ம் தேதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு 370, 35 ஏ ஆகியவற்றை நீக்கியது. மேலும் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களையும் உருவாக்கியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், கடைகள் மூடப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் அங்கு நடைபெற்ற முதல் தீவிரவாத சம்பவமாக இது கருதப்படுகிறது. 

News Counter: 
100
Loading...

Ramya