வரலாற்றில் இடம் பிடித்த அமெரிக்க அரசு முடக்கம்..!

share on:
Classic

மெக்சிகோ சுவர் விவகாரத்தில் முடங்கிய அமெரிக்க அரசு இன்று  22-வது நாளை எட்டியுள்ளதால், இதுவே அதிக நாட்கள் நீடித்த அரசு முடக்கமாக உள்ளது.

அதிக நாட்கள் நீடித்த அரசு முடக்கம்:

அமெரிக்க - மெக்சிகோ சுவர் விவகாரத்தில் பகுதியாக முடங்கிய அமெரிக்க அரசு தற்போது 22-வது நாளை எட்டியுள்ளது. இது தான் முதல் முறையாக அதிக நாட்கள் நீடித்திருக்கும் அரசு முடக்கமாக கருதப்படுகிறது. இதற்கு முன்னர் அதிபர் பில் கிளிண்டன் அதிபராக இருந்த போது 1995-96 -இல் 21 நாட்கள் அரசு முடங்கியது. தற்போது அதிபர் ட்ரம்ப், சட்ட விரோத குடியேற்றங்களை தடுப்பதற்காக அமெரிக்கா - மெக்சிகோ இடையே சுவர் கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சுவர் கட்டுவதற்கு தேவையான நிதியை ஒதுக்காத வரை தான் எந்த மசோதாவிலும் கையெழுத்திடப் போவதில்லை என்பதில் ட்ர்ம்ப் உறுதியாக உள்ளார்.
 

2019-ன் முதல் சம்பளத்தை இழந்த பணியாளர்கள்:

ட்ரம்பின் நடவடிக்கையால் சுமார் 8 லட்சம் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏர்போர்ட் பணியாளர்கள், சிறைச்சாலை காவலர்கள், எப்.பி.ஐ (FBI)அதிகாரிகள் உட்பட ஏராளமான பணியாளர்கள் இந்த வருடத்தின் முதல் சம்பளத்தை இழந்துள்ளனர். ஆட்கள் பற்றாக்குறையால் மியாமி சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து முனையங்களும் மூடப்பட்டன. பலப் பணியாளர்கள் ட்ரம்ப் எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் உடல்நலம் சரியில்லாமல் உள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட 8 லட்சம் பணியாளர்களில் 3.5 லட்சம் பேர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்து வருகின்றனர்.

 

ட்ரம்ப் என்ன சொல்கிறார்..?

அரசு முடக்கம் முடிவடைந்த பின் பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களின் சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டாலும், அதற்கு ட்ரம்ப் நிதி மசோதாவில் கையெழுத்திட வேண்டும். ஆனால் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ட்ரம்ப் சுவர் கட்டுவதற்கான மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த பிரச்சனையிலிருந்து வெளிவர ட்ரம்ப் அவசர நிலையை அறிவிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. மெக்சிகோவில் சுவர் எழுப்பும் திட்டம் அதிபர் ட்ரம்பின் தேர்தல் வாக்குறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

youtube