ஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..!!

share on:
Classic

அதிக செலவில்லாமல் சுற்றுலா செல்வதற்கான முதல் தேர்வு வால்பாறை தான். மக்களின் ஸ்விட்சர்லாந்து வால்பாறை குறித்து இன்றைய சுற்றலாம் பகுதியில் பார்க்கலாம்.

குளு... குளு... சூழலையும், அருவிகளையும், பசுமை மாறா காடுகளையும் தனக்குள் வைத்துக் கொண்டிருக்கிறது வால்பாறை. சூரியனுக்கே ஸ்வெட்டர் போடும் ஊர். காயப்போட்ட பச்சை ஜமுக்காளங்களாக காட்சி தரும் தேயிலைத் தோட்டங்கள். ஆள் நடமாட்டம் இல்லாத அடர் வனங்கள் எல்லாம் உங்களை பூலோக சொர்க்கம் இதுதான் என்று சொல்ல வைக்கும்.

பெயர் காரணம் :
பொள்ளாச்சியில் இருந்து 60 கி.மீ. தொலைவில் மலைமேல் இருக்கும் அழகிய ஊர் வால்பாறை. தென் இந்தியாவின் மிக உயரமான ஆனைமலையின் அடிவாரத்தில் வால் போன்று ஒட்டிக் கொண்டிருப்பதால் வால்பாறை என்று பெயர் கிடைத்திருக்கிறது.

வளைந்து நெளிந்து செல்லும் 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட சாலை. துவக்கத்தில் வருவது ஆழியாறு அணை. அதை ஒட்டிய பசும்புல் பூங்கா, வரிசைக் கட்டி நிற்கும் மரத்தடி கடைகள். அதில் கற்கண்டுபோல் இனிக்கும் பொள்ளாச்சி இளநீர், இளம் நுங்கு, பதநீர், சுடசுட அணை மீன் வறுவல் என்று ஒரு கட்டு கட்டிவிட்டு, வண்டியேறி 2 கிலோ மீட்டர் பயணித்தால் வரும் இடம் ஆழியாறு செக்போஸ்ட்.

இதன் அருகில்தான் உலக புகழ் பெற்ற அறிவுத்திருக்கோயில் உள்ளது. அமைதி தவழும் மலைச்சாரலில் அமைந்திருக்கும், இந்த தியான மண்டபத்தில் சில நிமிடங்கள் மௌனமாக அமர்ந்து இருந்தால் போதும், மனம் துடைத்த கண்ணாடி போல மாறிவிடும்.

மங்கி பால்ஸ் :
ஒரு குழந்தையின் குதூகலத்துடன் அங்கிருந்து மலைமேல் பயணித்தால், சாலையின் இரண்டு புறங்களிலும் வானுயர மரங்களை கொண்ட பள்ளத்தாக்குகள், சாலை கடந்து ஓடும் சிற்றோடைகள், துள்ளி ஓடும் புள்ளிமான்கள், தடுப்பு சுவர்களின் மேல் தவமிருக்கும் குரங்கு கூட்டங்கள் என்று பயணிக்கும் சாலையில் ஆர்ப்பாட்ட சத்தம் எழுப்பி உங்களை கைதட்டி அழைக்கும் இடம்தான், மங்கி பால்ஸ் என்கிற குரங்கு அருவி. மினரல் வாட்டரை மிஞ்சும் சுத்தமான அந்த அருவி நீரில் ஒரு சுகமான குளியல் போட்டு, ஈரம் காய சிறிது நடந்து வந்து வால்பாறை நோக்கி பயணிக்கலாம்.

இருபுறமும் பகலில் ஒரு இரவு காட்டும் அடர் வனம் முடிந்து, திடீர் என்று கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பச்சை புடவைகளை காயப்போட்டது போல காட்சி தரும் தேயிலைத் தோட்டங்கள். அதில் கொழுந்து கிள்ளும் முக்காடு பெண்கள் என்று கடந்தால் ஒரிடத்தில் ஒரு வெள்ளைக்காரரின் சிலை. அவர்தான் இந்த வால்பாறை மலை பிரதேசத்திற்குள் காலடி எடுத்து வைத்த முதல் மனிதர் மார்ஷல்.

மேற்குத்தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும் ஓர் அதிசய விலங்கு, வரை ஆடு. அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் உள்ள இதனை நாம் இங்கே காணலாம்.

கல்லாறு நீர்வீழ்ச்சி :
தென்னிந்தியாவில் அதிக மழை பொழிவு உள்ளதாகக் கண்டறியப்பட்ட இடம் கல்லாறு நீர்வீழ்ச்சி. வானம் விட்டுவிட்டு பூவாளி தூறல் போட்டுக்கொண்டே இருக்கும். அதில் நனைவது அற்புத சுகம். பாறைகள் மீது ஏறிப்போனால் ஓடை போன்று அமைதியாக சின்னக்கல்லாறு கண்ணாடி போல ஓடுவதை பார்க்கலாம். ஆற்றைக்கடக்க தொங்கு பாலம் ஒன்று உண்டு. அதில் நடந்து கடப்பது த்ரில் அனுபவம்.

வால்பாறை கூழாங்கல் ஆறு :
வால்பாறை நகரத்தை ஒட்டியுள்ள சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் சலசலத்து குழந்தைபோல தவழ்ந்து ஓடுகிறது, கூழாங்கல் ஆறு. இதில் குழந்தைகளுடன் நீந்தி குளித்து குதூகலிக்கலாம். தண்ணீரை விட்டு எழ மனமிருக்காது.

வால்பாறையில் இருந்து 25 கி.மீ பயணித்தால் வருவது நல்லகாத்து எஸ்டேட். இந்த பகுதியில் இருக்கிறது காட்சி முனை. இதன் உச்சியில் இருந்து பார்த்தால் கேரளா மலைவாழ் மக்களின் குடியிருப்புகள், தூரத்தில் சுற்றித்திரியும் யானைக் கூட்டங்களையும் காணலாம்.

டாப் சிலிப் :
பொள்ளாச்சியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் இருக்கிறது டாப் சிலிப். அடர்ந்த காட்டினுள் சென்று சுற்றிப் பார்த்து வர யானை சவாரி உண்டு. இன்னும் ஒரு அதிசயம் மர வீடு. உயரமான பெரிய மரங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள மரத்தினாலான வீடுகள் இரண்டு உண்டு. நூல் ஏணியில் எறிச்சென்று இரவு தங்கலாம். நடு இரவில் உலா வரும் காட்டு விலங்குகளை மரவீட்டின் ஜன்னல் வழியே கண்டு ரசிக்கலாம். இதில் தங்கி மகிழ முன்பதிவு அவசியம்.

அக்காமலை புல்வெளி :
வால்பாறையின் அதிசயம் அக்கா மலைப் புல்வெளி. கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து கிடக்கும். இந்த புல்வெளிதான் பெய்யும் மழை நீரை சேமித்து வைக்கும் அட்சய பாத்திரங்கள். புல்வெளியில் இருந்து கசியும் நீர்தான் சிறு சிறு ஓடைகளாக உருவாகி ஒன்று சேர்ந்து ஆர்ப்பரிக்கும் ஆறாக மாறி நாட்டை வளப்படுத்துகிறது என்பது இயற்கையின் சுழற்சி முறை. கொடிய விலங்குகளின் நடமாட்டம் உள்ள அக்காமலை புல்வெளியை சுற்றிப்பார்க்க வனத்துறையிடம் அனுமதி பெறவேண்டும்.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி :
வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலையில் சென்றால் 2 மணிநேர பயணத்தில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி என்கிற புன்னகை மன்னன் அருவி. கமலஹாசன் நடித்த புன்னகை மன்னன் படத்தின் முக்கிய காட்சிகள் இந்த அருவிப்பகுதியில் எடுக்கப்பட்டதால் இந்த பெயர். குட்டி நயாகரா போல் தண்ணீர் கொட்டும் இந்த பிரமாண்டம் காண்போரை கவரும் என்பதில் ஐயமில்லை.

வால்பாறையை சுற்றியுள்ள பகுதிகளில் சின்னக் கல்லாறு, அப்பர், காடாம்பாறை, ஆழியாறு, சோலையாறு அணைகள் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள். இவையெல்லாம் வால்பாறையை சுற்றியும், போகும் வழியிலும் அமைந்துள்ளவை.

நீங்கள் சென்னைவாசி என்றால், யோசிக்காமல் 520 கி.மீ தூரம் பயணித்து பொள்ளாச்சிக்கு வந்தாக வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து 64.7 கி.மீ தொலைவில், 40 கொண்டை ஊசிகளைத் தாண்டி வால்பாறைக்குச் செல்ல வேண்டும். செல்லும் வழியில் சின்னக் குற்றாலம் என்றழைக்கப்படும் குரங்கு அருவி, அட்டக்கட்டி, ரொட்டிக் கடை என்று பச்சைப் பசேல் பயணம், வயதையும் மனதையும் இளமையாக்கும்.

உணவு, உடை, உறைவிடம் என்று எதற்கும் வால்பாறையில் கவலைப்பட வேண்டாம். தடுக்கி விழுந்தால் ஹோட்டல்கள். அறை வாடகை 1,000 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கின்றன. ஏ.சி, மின் விசிறி எதுவும் தேவைப்படாத இடம். சீஸன் இரவில் கிட்டத்தட்ட 12 டிகிரி வரை குளிர் இருப்பதால், கம்பளி, ஸ்வெட்டர்கள் நிச்சயம் தேவை. இயற்கை ஆர்வலர்கள், சிற்றருவி மற்றும் ஓடைகளின் சலசலப்பினூடே உறக்கம்கொள்ள வீடு போலவே இருக்கும் தனி காட்டேஜ்களும் உண்டு. இங்கு 450 சதுர அடிகொண்ட இது போன்ற அறைக்கு நாள் வாடகை 2,500 ரூபாய். கூடுதல் படுக்கைக்கு 200 ரூபாய்.

வால்பாறையில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம் சென்றால் சின்னக் கல்லாறு நீர்வீழ்ச்சியையும், 20 கிலோ மீட்டர் தொலைவில் சோலையார் அணையையும், 37 கிலோ மீட்டர் தொலைவில் டாப் சிலிப் யானை சவாரியை அனுபவிக்கலாம். குடும்பத்துடன் பட்ஜெட் டூர் செல்ல விரும்புகிறவர்கள் கண்டிப்பாக வால்பாறையினை தேர்வு செய்யலாம்.

News Counter: 
100
Loading...

Ragavan