வெனிசூலாவில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி..!

share on:
Classic

வெனிசூலாவில் ஆட்சியைக் கவிழ்க்கும் வகையில், அரசுக்கு எதிராக பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்களில் கலவரம் வெடித்தது.

வெனிசூலாவின் அதிபராக நிகோலஸ் மதுரோ கடந்த ஆண்டு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், இதை ஏற்காத எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ, தன்னை இடைக்கால அதிபராக பிரகடனம் செய்தார். ராணுவத்தினர் தங்களுக்கு ஆதரவாக இருந்து, மதுரோவை வெளியேற்ற போராடும்படி கேட்டுக்கொண்டார். 

முதல் முறையாக ராணுவ வீரர்களுடன் தோன்றி பேசிய அவர், அரசியல் சாசனத்தை காக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை வீரர்கள் ஏற்றுக்கொண்டு, மதுரோவுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்திருப்பதாகவும், மதுரோவை வெளியேற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியதால், குவைடோவின் ஆதரவாளர்களுக்கும் ராணுவத்தினருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டது. 

மற்ற இடங்களிலும் கலவரம் வெடித்தது. கலவரக்காரர்களை போலீசார் மற்றும் கலவர தடுப்பு பிரிவு போலீசார் விரட்டியடித்தனர். இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடித்துவிட்டதாக அதிபர் மதுரோ தெரிவித்தார். இது தொடர்பாக தொலைக்காட்சி மற்றும் வானொலியில் உரையாற்றிய அவர், ராணுவத்தில் ஒரு சிறு குழுவினர் அரசைக் கவிழ்க்கும் முயற்சியாக வன்முறையில் ஈடுபட்டதாகவும், அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இதற்கிடையே, அரசுக்கு எதிராக புதிய போராட்டங்களை முன்னெடுக்கும்படி குவைடோ அழைப்பு விடுத்துள்ளார். குவைடோவின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan