’இளையராஜா 75’ விழாவிலும் எதிரொலித்த தயாரிப்பாளர் சங்க பிரச்சனை.... விஷால் கேலி, கிண்டல்

share on:
Classic

’இளையராஜா 75’ விழாவில் எதிரணி தயாரிப்பாளர்களை விமர்சிக்கும் விதமாக நடிகர் விஷால் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளையராஜா 75:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நிதி திரட்டும் விதமாகவும், இசையமைப்பாளர் இளையராஜாவின் திரையுலக சாதனைகளைப் போற்றும் வகையிலும்  ’இளையராஜா 75‘ என்ற பெயரில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்றும், நாளையும் பிரமாண்டமான கலைவிழா நடக்கிறது! இதற்கான ஏற்பாடுகளை நடிகர் விஷால் தலைமையின்கீழ் இருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செய்துள்ளது. இந்த விழாவையொட்டி இன்றும், நாளையும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுள்ளன.  இன்று மாலை கோலாகலமாக தொடங்கிய இவ்விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உட்பட தமிழ் திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்களும், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள பட உலகைச் சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகளும் கலந்துகொண்டனர். 

விஷாலின் அதிரடி பேச்சு:
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஷால், "சிம்ஃபனி இசையை சிறப்பாக வடிப்பதில் வல்லமை பொருந்திய ஒரே இசையமைப்பாளர் இளையராஜா தான். இவரது இசை பயணத்தை சிறப்பிப்பதற்காகவே தற்போதைய நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென சிலர் கடுமையாக முயற்சித்தனர். அவர்களது முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளன. எங்கிட்ட மோதாதே நா ராஜாதி ராஜனடா வம்புக்கு இழுக்காதே நா சூராதி சூரனடா என்று இளையராஜா ஏற்கனவே பாடி விட்டார். இதன் அர்த்தம் யாருக்கு புரிகின்றதோ இல்லையோ இந்த விழாவை நடத்த விடக்கூடாது என முயற்சித்தவர்களுக்கு நன்றாக புரியும் இவ்வாறு கூறினார். 

விஷால் அதிரடியாக பேசியதன் காரணம்:
தயாரிப்பாளர் சங்கத்தின் எட்டே முக்கால் கோடி ரூபாய் விவகாரத்தில் தமக்கெதிராக போர்க்கொடி தூக்கிய ஜே.கே.ரித்தீஷ், ஏ.எல்.அழகப்பன் உள்ளிட்ட தயாரிப்பாளர் அணியினரை விமர்சிக்கும் விதமாகவே விஷாலின் பேச்சு அமைந்திருந்தது. இந்த இசை நிகழ்ச்சி மூலம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ரூ.10 கோடி நிதி திரட்டி, அந்த தொகையை நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான நிலத்தை வாங்குவது உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ராஜாவின் இசைக்கச்சேரி நாளை:
நடிகைகள் பூர்ணா, ரூபினி, சுனைனா, மஞ்சிமா மோகன், நிக்கி கல்ராணி, வேதிகா, சாயிஷா, இனியா, ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன் ஆகியோர் அசத்தலாக நடனம் ஆடினர். நடிகர்கள் ரோபோ சங்கர், யோகிபாபு, சதீஷ், நடிகை கோவை சரளா ஆகியோரின் நகைச்சுவை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. திரையுலக பிரமுகர்களோடு சேர்ந்து இந்த கலை நிகழ்ச்சியை பார்த்து ரசித்தார் இளையராஜா.  நாளைய நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெறுகிறது. 

News Counter: 
100
Loading...

mayakumar