தமிழகத்தில் மொத்தம் 60 மாவட்டங்கள் வேண்டும் : அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..

share on:
Classic

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் மறுவரையறை செய்து, 12 லட்சம் மக்கள் தொகைக்கு வீதம் மொத்தம் 60 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

நேற்று தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய நகரங்கள் புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்டார். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இவற்றை நிறைவேற்றியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அன்புமணி ராமதாஸ் முதலமைச்சரின் புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். மேலும் “ பெரிய மாவட்டங்களை பிரித்து சிறிய மாவட்டங்களாக உருவாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர வேண்டும். தமிழகத்தில் மிக நீண்ட எல்லையை கொண்டது வேலூர் மாவட்டம். வேலூரின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு செல்ல 200 கி.மீ பயணிக்க வேண்டும். மாவட்டத்தின் எந்த எல்லையிலிருந்து வேலூருக்கு செல்வதாக இருந்தாலும் குறைந்தது 100 கி.மீ பயணிக்க வேண்டும். எனவே வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.

இதேபோல் திருவண்ணாமலை, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகியவை 5000 சதுர கி.மீக்கு அதிகமான பரப்பளவை கொண்ட மாவட்டங்கள் ஆகும். பெரிய மாவட்டங்கள் அதன் வளர்ச்சிக்கு வழி வகுக்காது என்பதால் பெரிய மாவட்டங்களை பிரித்து அதிக சிறிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டமாக பிரிப்பதை விட, பெரிய மாவட்டங்களை ஒரே நேரத்தில் பிரிப்பது தான் சரியாக இருக்கும். அதன்படி, தமிழ்நாட்டின் அனைத்து பெரிய மாவட்டங்களை மறுவரையறை செய்து 12 லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு மாவட்டம் வீதம் மொத்தம் 60 மாவட்டங்களை உருவாக்க வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

News Counter: 
100
Loading...

Ramya