டிக் டாக் தடை காரணம் என்ன..? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்..

share on:
Classic

தமிழகத்தில் டிக் டாக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் மட்டும் பயன்படுத்தி வந்த காலம் மாறி தற்போது அனைத்து தரப்பினரும் அதனை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுவதாக அதற்கு தடை விதிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. உண்மையில் ஆபத்தானதா டிக் டாக்..? அதனால் பாதிக்கப்படுவது யார்..? விரிவாக பார்ப்போம்

டிக் டாக்-ன் வளர்ச்சி :

ஆரம்பத்தில் மியூசிக்கலி (Musically) ஆக இருந்த ஆப் பின்னர் டிக் டாக் (Tik Tok) ஆக மாறியது. டிக் டாக் பயன்படுத்துவதற்கு மிக எளிமையானதாகவும், இந்த ஆப்-பில் கணக்கு தொடங்க வெறும் செல்போன் நம்பர் மட்டும் பதிவு செய்தால் மட்டுமே போதுமானதாக உள்ளது. 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் அக்கவுண்ட் தொடங்கலாம், 18 வயதிற்கு உட்பட்டவர்கள் பெற்றோரின் வழிகாட்டலுடன் பயன்படுத்தலாம் என்று அதன் விதிமுறையில் இருந்தாலும், பெரும்பாலானோர் விதிமுறைகளை படிப்பதில்லை என்பது தான் உண்மை.

சமூக சீர்கேடு :

டிக் டாக் ஆப்-ல் பாடல்கள், வசனங்கள், காமெடி வசனங்கள் ஆகியவற்றிற்கு டப்பிங் செய்யலாம். தனியாகவோ அல்லது நண்பர்களுடன் சேர்ந்து நடிக்கவோ, பாடவோ, ஆடவோ செய்யலாம். அதில் அதிகமாக டபுள் மீனிங் வசனங்களுக்கு வாயசைப்பது, ஆபாச உடைகள் அணிந்து டான்ஸ் ஆடுவது, சாதி ரீதியான வசனங்கள் பேசுவது போன்ற வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுவதால் இதற்கு கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. மாணவர்களும் இதை அதிகளவில் பயன்படுத்தி வருவதால், அவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். 

சாதி மோதல் :

இளைஞர்கள் சாதிய பெருமைகளுக்காக டிக் டாக் ஆப்-ஐ அதிகளவில் பயன்படுத்துவதாக அண்மையில் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. காவல் நிலையங்களில் அது சம்மந்தமான வசனங்களை வைத்து வீடியோக்கள் எடுப்பதால் இளைஞர்கள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.

டிக் டாக்-க்கு தடை..?

தமிழக சட்டப்பேரவையில் பேசிய எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி, பல்வேறு ஆபாச செயல்களுக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது என்பதால் டிக் டாக் ஆப்-க்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு பதலளித்த அமைச்சர் மணிகண்டன், ப்ளூ வேக் கேமை போன்று டிக் டாக் செயலியையும் தடைசெய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று தெரிவித்தார்.

 

எச்சரிக்கும் மனநல மருத்துவர்கள் :

பெண்கள் அதிகளவில் வீடியோக்களை பகிர்வதால், அவர்களுக்கு தெரியாமலேயே அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. இதனால் பெண்களுக்கு பாதிப்புக்கள் அதிகம் என்று கூறுகின்றனர் மனநல மருத்துவர்கள். உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் தான் டிக் டாக்-ஐ அதிகளவில் பயன்படுத்துவதாக கூறும் அவர்கள், இது ஒரு மனநோய் எனவும், இது ஆரோக்கியமான போக்கு அல்ல என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அனைத்துமே டிஜிட்டல் மயமாகி வரும் இன்றைய உலகில், எந்த ஒரு தொழில்நுட்பத்திற்கும் அடிமையாகாமல் அதன் பயன்களை அனுபவிக்கலாமே தவிர அதிலேயே முழ்கிக் கிடப்பதால் பாதிப்பு ஏற்படுவது நமக்கு மட்டும் தான். 

News Counter: 
100
Loading...

Ramya