சின்னத்தம்பியின் தவிப்புக் கதை...! மன அழுத்தம் அதிகரிப்பு

share on:
Classic

தமிழகத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது சின்னத்தம்பி யானை. வனத்துறையால் காட்டுக்குள் அனுப்பப்பட்ட சின்னத்தம்பி மீண்டும் ஊருக்குள் புகுந்ததால் அந்த யானை கும்கியாக மாற்றப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வன உயிரின ஆர்வலர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  யானைகள் குடியிருப்பு பகுதிகளில் திரிவதற்கு காரணம் யார்?.. யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமப்பு தொடர்வது ஏன்?..யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு என்ன காரணம்?.. சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் நடவடிக்கை சரிதானா?.. இதுகுறித்து விரிவாக அலசுவோம்..

சின்னத்தம்பியும், விநாயகனும்:

கோயம்புத்தூர் மாவட்டம் தடாகம், மாங்கரை வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு இரண்டு ஆண் யானைகள் சுற்றித்திரிந்தன. அடிக்கடி அந்த யானைகளை பார்த்ததால் அடையாளத்திற்காக சின்னத்தம்பி, விநாயகன் என்று பெயர் வைத்தனர் அந்த பகுதி மக்கள். இந்த இரண்டு யானைகளும் அவ்வப்போது விவசாய நிலங்களை நாசம் செய்தும், குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தும் அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தன. இந்த யானைகளால் பயிர் சேதம், வீடுகள் சேதமடைந்தது மட்டுமல்லாமல் உயிர் சேதமும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் யானைகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.

 

தனிஒருவனாக களமிறங்கிய சின்னத்தம்பி :
விநாயகன் யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். மயக்க ஊசி செலுத்தி அந்த யானையை பிடித்த வனத்துறையினர், லாரியில் ஏற்றிச் சென்று நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதிக்குள் விட்டனர். இதனால் தனிஒருவனாக களமிறங்கிய சின்னத்தம்பி மீண்டும் தன் சேட்டைகளை தொடர ஆரம்பித்தது. பலப் போராட்டங்களுக்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது சின்னத்தம்பி. இதனைத்தொடர்ந்து லாரி மூலம் டாப்சிலிப் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. சின்னத்தம்பியின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ள அதன் உடலில் ஜிபிஎஸ் (GPS) கருவியை பொருத்தினர் வனத்துறையினர்.

 

மீண்டும் கெத்து காட்டிய சின்னத்தம்பி :

டாப்சிலிப் வனப்பகுதிக்குள் விடப்பட்ட சின்னத்தம்பி யானை இரண்டே நாட்களில் மீண்டும் ஊருக்குள் புகுந்தது. யானையின் உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதால், அதன் மூலன் சின்னத்தம்பியின் இருப்பிடத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 3 நாட்களில் மட்டும் 100 கி.மீ தூரத்தை கடந்துள்ள சின்னத்தம்பி தற்போது உடுமலை அருகே தஞ்சமடைந்துள்ளது. சின்னத்தம்பி யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்ட தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அந்த யானை கும்கியாக மாற்றப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 

காடுகளை அழித்த மனிதர்கள் :

மனிதர்கள் காடுகளை ஆக்கிரமிக்க தொடங்கியதால் தான் யானைகளின் வழித்தடங்கள் பெரும்பாலும் அழிந்துவிட்டன. விவசாயப் புரட்சி, பசுமைப் புரட்சி என காடுகளை பற்றிய புரிதலே இல்லாமல் நாம் காடுகளை அழித்துவிட்டோம் என்று கூறுகின்றனர் வன ஆர்வலர்கள். யானைகள் தங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த இடத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் அதற்கும் குடும்பம் இருக்கிறது, உறவு இருக்கிறது அவைகளை தொலைத்துவிட்டு அது மட்டும் எப்படி வேறு இடத்தில் வாழ முடியும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர் வன ஆர்வலர்கள். 2012-ல் இருந்த யானைகளின் எண்ணிக்கை இப்போது இல்லை. ஆண்டிற்கு ஆண்டு யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

 

கும்கியாக மாற்றுவது சரிதானா ?..

யானைகளுக்கு ஒரு நாளைக்கு 150 லிட்டர் தண்ணீராவது தேவை. ஒரு இடத்தில் தண்ணீர் இல்லை என்றால், அடுத்த இடத்திற்கு யானைகள் நகர்ந்து கொண்டே இருக்கும். எனவே யானைகளின் வழித்தடத்தில் நாம் எந்த அக்கிரம்மிப்பும் செய்யாமல் இருப்பதே இதற்கு தீர்வாக இருக்க முடியும் எனவும் வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் முயற்சிக்கு வன ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எல்லா யானைகளையும் கும்கி யானைகளாக மாற்ற முடியாது. அதற்கான உடல் வலிமை, அமைப்பு இருந்தால் தான் கும்கிகளாக மாற்ற முடியும் என்றும் கூறப்படுகிறது.

 

நீதிமன்றத்தில் வழக்கு :

சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞரும், விலங்குகள் நல ஆர்வலருமான அருண் பிரசன்னா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் யானைகளை அதன் வாழ்விடத்திலேயே கொண்டு செல்ல வேண்டும் எனவும், அதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டியும், யானைகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை எனவும், அதனை பாதுகாப்பாக காட்டிற்கு அனுப்பவே அரசு முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எது எப்படியோ யானைகளின் வழித்தடத்தில் இனிமேலாவது ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்ளாமல் அவற்றின் வழித்தடங்களிலேயே சுற்றித்திரிய குறைந்தபட்ச அனுமதியையாவது நாம் யானைகளுக்கு கொடுப்போம்..

News Counter: 
100
Loading...

aravind