உலகின் உயரமான ராமர் சிலை : அயோத்தியில் 251 மீட்டர் உயரத்தில் அமைக்க திட்டம்..!!

share on:
Classic

உலகிலேயே உயரமான ராமர் சிலை அயோத்தியில் அமைக்கப்படும் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் மூத்த அரசு அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் யோகி புனித நகரமான அயோத்தியில் 100 ஏக்கர் பரப்பளவில், 251 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமான ராமர் சிலை அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கு தேவையான முழு திட்டத்தையும் தயாரிக்கும் படியும் அவர் உத்தரவிட்டார்.

மேலும் பேசிய அவர் “ ராமர் சிலை அமைக்கும் போது, அயோத்தின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களும் செயல்படுத்தப்படும். சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், நூலகம், உணவு மையம் உள்ளிட்டவை கடவுள் ராமரை மையமாக கொண்டு அமைக்கப்படும் “ என்று தெரிவித்தார். உலகின் உயரமான சிலையை அமைக்க, தொழில்நுட்ப உதவிகளுக்காக குஜராத் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் உ.பி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

நியூ யார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலையின் உயரம் 93அடி ஆகும். மும்பையில் உள்ள டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் சிலையின் உயரம் 137.2 மீட்டராகும். குஜராத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையின் உயரம் 183 மீட்டர். சீனாவில் உள்ள புத்தர் சிலை 208 மீட்டர் உயரமாகும், இதேபோல் மும்பையில் சத்ரபதி சிவாஜியின் சிலையின் உயரம் 212 மீட்டராகும். இந்த நிலையில் அயோத்தியில் 251 மீட்டர் உயரத்தில் அமைய உள்ள ராமர் சிலை, தான் உலகின் உயரமான சிலையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ramya