சுட்டெரிக்கும் சூரியன் : ஆன்மீக சுற்றுலா சென்ற 5 தமிழர்கள் வெயில் கொடுமையால் உயிரிழப்பு..

share on:
Classic

இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வெயில் கொடுமை காரணமாக, ரயிலில் பயணம் செய்த 5 முதியவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே வெப்பநிலை கணிசமாக அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான கோடை வெப்பம் நிலவுகிறது. டெல்லி, ராஜஸ்தானின் சுரு மற்றும் பாண்டா, உத்திரப்பிரதேசத்தின் அலகாபாத் ஆகிய நகரங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 48 டிகிரி செல்சியஸ்-க்கும் அதிகமாக பதிவாகியது. கடந்த வாரம் சுரு நகரம் 2 முறை 50 டிகிரி செல்சியஸை கடந்தது. மேலும் வழக்கத்தை விட 8 டிகிரி அதிக வெப்பம் பதிவானது. இதேபோல் பாண்டாவில் 49.2 டிகிரியும், அலகாபாத் நகரில் 48.9 டிகிரியும், டெல்லியில் 48 டிகிரி வெப்பமும் நேற்று முன் தினம் பதிவானது. 

இந்நிலையில் நேற்று கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த 5 மூத்த குடிமக்கள், வெயில் காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் வடமாநிலங்களுக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்கள் சுற்றலாவை முடித்து ஊருக்கு திரும்புவதற்காக ரயிலில் பயணம் செய்த போது, ரயில் உத்திரப்பிரதேசம் மாநிலம் ஜான்சி வந்தடைந்த போது வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் 4 பேர் மயக்கமடைந்தனர். 

இதனைத் தொடர்ந்து மருத்துவர் வந்து சிகிச்சை அளித்த போது அவர்கள் நால்வரும் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் மயக்கமடைந்த ஒருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவர்கள் அனைவரும் கோவையை சேர்ந்த மூத்த குடிமக்கள் ஆவர். உடற்கூறாய்வுக்கு பின் அவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ramya