எழுத்தாய் எண்ணமாய் என்றும் "பிரபஞ்சன்"...!!!

share on:
Classic

எழுத்தாய் எண்ணமாய் என்றும் நம்மில் இரண்டறக் கலந்திருக்கும் "சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் "பிரபஞ்சன்".

வார்த்தைகள் எல்லோரிடமும் இருக்கின்றன. வார்த்தைகள் மூலமாகத்தான் நம்மை விளங்கிக் கொள்ள விதிக்கப்பட்டிருக்கிறோம் அல்லது சபிக்கப்பட்டிருக்கிறோம். நான் வார்தைகளால் நிரம்பி இருக்கிறேன். ஆகவே நான் பேச விரும்புகிறேன் - பிரபஞ்சன் 

சுய சரிதை.

இந்தியா, பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு உட்பட்டுச் சுதந்திரத்துக்குப் போராடிக் கொண்டிருந்தபோது, புதுச்சேரி (பாண்டிச்சேரி ), பிரஞ்ச் ஆட்சிக்குக் கீழ் வதைபட்டுக் கொண்டிருந்தது.1954-ல் புதுச்சேரி மாநிலம் சுதந்திரம் பெற்றது. அதற்கு முந்தைய 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ஆம் நாள் பிறந்தார். 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் நாள் புற்றுநோய் காரணமாக தனது 73-வது வயதில் மறைந்தார்.

இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். இவரது தந்தை இந்திய தேசிய காங்கிரசில் இருந்தார். இவரது மனைவியின் பெயர் பிரமிளா ராணி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டம் பெற்றார். கல்லூரிப் படிப்பை தஞ்சையில் முடித்தார், தஞ்சை பிரகாஷ் வழியாக நவீன தமிழ் இலக்கிய ஆசிரியர்களை அறிமுகம் கண்டார்.காவிரிக் கரைக் கலாச்சாரம், தமிழின் மரபார்ந்த சாகைகள். அந்தக் கலச்சாரத்தின் செழித்த பங்களிப்பான கர்நாடக இசை என அனைத்திலும் இரண்டற கலந்தார்.தனது வாழ்க்கையை தஞ்சாவூரில் ஆசிரியராகத் தொடங்கினார். 

புகழ்பெற்ற எழுத்தாளர்.

குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் ஆகிய வாரப் பத்திரிக்கைகளில் பணிபுரிந்தார். இவரது முதல் சிறுகதை "என்ன உலகமடா பரணி" பத்திரிக்கையில் 1961ல் வெளியானது. இவர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். இதுவரை 46 புத்தகங்களுக்கும் அதிகமாக எழுதியுள்ளார். 

1995ல் இவரது வரலாற்றுப் புதினம் "வானம் வசப்படும்" தமிழுக்கான "சாகித்திய அகாதமி விருது" பெற்றது. இப்பபுதினம் ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது. அவர் 250 சிறுகதைகள், 300 கட்டுரைகள் மற்றும் 10 நாவல்கள் எழுதியுள்ளார்.

இவரது படைப்புகள் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் சுவீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இவரது "நாடகமான முட்டை" டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது. இவரது சிறுகதைத் தொகுப்பான "நேற்று மனிதர்கள்" பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக்கப் பட்டுள்ளது.

பிரபஞ்சனின் சில நினைவுகள்.

மிக அழகான எங்கள் ஊர் கடற்கரை, மண்ணையும் விண்ணையும் இணைவிக்கிற 'சப்தம்' பற்றிய புரிதலை எனக்குத் தந்திருக்கிறது. சப்தங்களின் ஒரு அலகு தான் சொற்கள். தரப்படுத்தப்பட்ட ஓசைகளாகிய வார்த்தைக் களஞ்சியத்தை, எங்கள் கடல் காற்றில் இருந்துதான் என் மூளை அடுக்குகளில் ஏற்றிக்கொண்டிருக்கிறேன். ஐயாயிர ஆண்டு மொழிச் சொற்கள் என் அறிவுக் கிடங்கில், கடற்காற்று மூலம் தான் வந்து படிந்திருக்க வேண்டும்.

எழுத்து, இசை, கலை ,பண்பாடு எல்லாம் மனிதர்களை ஒருவரோடு ஒருவரை இசைவிக்கத்தானே அன்றி வேறு எதற்கும் இல்லை. அன்பால் இணைந்து, அன்பால் புரிந்து கொண்டு அன்பே பிரதானமாகக் கொண்டு ஒரு உலகத்தை உருவாக்கும் தொழிலையே நான் செய்கிறேன் என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு. மனித குலம் அன்பினால் மட்டுமே தழைக்கும், என்பதே என் செய்தி.

எழுத்தாணி ..!

"ஒரு சாதாரண மனிதனுக்கு மரணம் உடலைப் பற்றியது. ஒரு எழுத்தாளனுக்கு மரணம் உடலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. உங்களின் படைப்புக்களின் வாயிலாக வாசகர்களினூடே எழுத்தாகவும், எண்ணங்களாகவும் இரண்டறக்கலந்து என்றும் வாழ்வீர் பிரபஞ்சம் முடிவடையும் வரையில் பிரபஞ்சனே" இப்படிக்கு என்றும் உங்கள் கனத்த நினைவுகளை சுமக்கும் எழுத்தாணி.
 

 

 

 

 

 

 

News Counter: 
100
Loading...

sasikanth