மாட்டிறைச்சி சாப்பிட்ட இளைஞர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்..தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

share on:
Classic

மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் வட மாநிலங்களில் அரங்கேறுவதை செய்திகளாக கடந்திருப்போம். ஆனால் தமிழகத்திலும் அதுபோன்ற தாக்குதல் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் வடமாநிலங்களில் அரங்கேறி வந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நாகையிலும் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. நாகை பொரவச்சேரியைச் சேர்ந்த முஹம்மது பைஜான் என்பவர், மாட்டுக்கறி சூப் சாப்பிட்டதை புகைப்படம் எடுத்து, தனது முகநூலில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் முஹம்மது பைஜான் வீட்டிற்கு சென்று, அவரை கடுமையாக தாக்கியதாகவும், கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் பலத்த  காயமடைந்த  முஹம்மது பைஜான் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், 20 பேர்  கொண்ட கும்பலை தேடி வந்த போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். 

இதுதொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், முகம்மது பைஜானுக்கு ஆதரவாக, Beef 4 Life, we love beef, Beef For Life  ஆகிய மூன்று ஹேஷ் டேக்குகள் டுவிட்டரில் இந்திய அளவில் முதல் மூன்று இடங்களில் டிரெண்டாகி வருகின்றன. இதுதொடர்பாக ஆதரவு பதிவுகளும், மீம்ஸ்களையும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர். 

மாட்டிறைச்சி சாப்பிட்டதால் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.  நாட்டில் பா.ஜ.க இரண்டாவது முறை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து இதுபோன்ற  சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக மக்களை அடித்து துன்புறுத்தியதை சுட்டிக்காட்டியுள்ள அவர், தமிழகத்திலும் அத்தகைய சம்பவம் அரங்கேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக அமைதியைச் சீர்குலைக்கத் சில வன்முறை கும்பல்கள் திட்டமிட்டு இதுபோன்ற தாக்குதலை அரங்கேற்றியுள்ளதாக ஜவாஹிருல்லா குற்றம்சாட்டியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind