அக்சென்ச்சர் ஆட்குறைப்பு.. 19000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு!

அக்சென்ச்சர் ஆட்குறைப்பு.. 19000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு!

முன்னணி ஐடி நிறுவனமான அக்சென்ச்சர் சுமார் 19000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளது.

பிரபல ஐடி நிறுவனமான அக்சென்ச்சர் (Accenture) சுமார் 19000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளது. மேலும், அக்சென்ச்சர் நிறுவனம் தனது வருவாய் மற்றும் லாபம் கணிப்புகளையும் குறைத்துக்கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சத்தால் பல்வேறு பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வருகின்றன. குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுமே பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளன.

இந்த வரிசையில் தற்போது முன்னணி ஐடி நிறுவனமான அக்சென்ச்சர் 19000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளது. இதன்படி அக்சென்ச்சர் நிறுவனம் தனது மொத்த ஊழியர்களில் 2.5% பேரை பணிநீக்கம் செய்ய இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், அக்சென்ச்சர் நிறுவனம் தனது வருவாய் மற்றும் லாபம் எதிர்பார்ப்புகளை குறைத்துள்ளது. அக்சென்ச்சர் நிறுவனம் தனது ஆண்டு வருவாய் வளர்ச்சி 8% முதல் 11% வரை இருக்கும் என ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆண்டு வருவாய் வளர்ச்சி எதிர்பார்ப்பை 8% முதல் 10% வரை குறைத்துள்ளது.

இரண்டாம் காலாண்டில் அக்சென்ச்சர் நிறுவனம் 244 மில்லியன் டாலர் செலவு செய்துள்ளது. 2024ஆம் நிதியாண்டில் 1.5 பில்லியன் டாலர் செலவுகள் ஏற்படும் என அக்சென்ச்சர் நிறுவனம் எதிர்பார்க்கிறது. இதற்கிடையே பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சமும் நீடித்து வருகிறது.

அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை 2.5% உயர்த்தியுள்ளது. இதனால் பொருளாதார மந்தநிலை மேலும் வேகமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அக்சென்ச்சர் நிறுவனம் 19000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே மைக்ரோசாப்ட், அமேசான், கூகுள், ஐபிஎம் என பல்வேறு தொழில்நுட்ப துறை நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.